logo
 திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  செயல்படாத நிலையிலுள்ள நலவாரியத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படாத நிலையிலுள்ள நலவாரியத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

30/Mar/2021 12:08:08

ஈரோடு, மார்ச்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  செயல்படாத நிலையிலுள்ள நலவாரியத் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்  ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  திருமகன் ஈவெரா.

ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோவில், சக்தி நகர், தங்கவேல் வீதி, பாரதிதாசன் வீதி, குமரன் வீதி, பாரதி வீதி, காந்திஜி வீதி போன்ற பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். 

வாக்காளர்களிடம் வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:இப்பகுதியில் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், பீடி தொழிலாளர்கள், சாலையோர கடை வைத்திருப்பவர்கள், கூலி தொழிலாளர்கள், ஜவுளி சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் குடும்பம் அதிகம் உள்ளது. இவர்களை அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் மற்றும் அவர்களுக்கான வாரியங் களில் உறுப்பினராக்கி, அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகை, நிவாரணம், நலத்திட்டங்கள், உதவித்தொகை போன்றவற்றை பெற்றுத்தர முயல்வேன்.

நலவாரியங்களை தொழிலாளர்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை. அவற்றை பயன்படுத்த உதவுவேன்.இவர்கள் தொழில் சார்ந்து நவீன பயிற்சி, புதிய கூடங்கள் அமைக்க கடனுதவி போன்றவற்றுக்கு முகாம் ஏற்பாடு செய்து பெற்றுத்தருவேன். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் தங்கி இருந்து, அலுவலகம் அமைத்து உங்கள் குறைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வு காண்பேன். மத்திய, மாநில அரசுகளில் இத்தொழில் சார்ந்த முன்னேற்றத்துக்கான திட்டங்களை பெற்றுத்தருவேன்.

சத்தி சாலை முதல் நான்கு வழிச்சாலை அமையவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன். திமுக ஆட்சி அமையும் நிலையில், ஆண்டு முழுவதும் அரசின் திட்டங்களில் இலவச வேட்டி, சேலை, பள்ளிகளுக்கான சீருடை, பிற அரசு துறை சீருடைகளுக்கான ஆர்டர்கள் பெற்றுத்தருவேன். 

இவற்றை நிறைவேற்ற, எனக்கு கை சின்னத்தில்  வாக்களித்துவெற்றி பெற செய்யுங்கள் என்று பேசினார்.பின்னர், காந்தி நகர், நல்லிதோட்டம், வெட்டுகாட்டுவலசு, போஸ்டல் நகர், பண்ணை நகர், யூ.ஆர்.சி., நகர், வீரப்பம்பாளையம் பைபாஸ் போன்ற பகுதிகளில் தொழிற்சாலை, ஒர்க்‌ஷாப் போன்ற பகுதிகளிலும் , வீடுகளில் கை சின்னத்துக்கு  வாக்கு சேகரித்தார்.

Top