logo
சீராக குடிநீர் வினியோகம் வழங்கக்கோரி ஈரோடு  மாநகராட்சி லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

சீராக குடிநீர் வினியோகம் வழங்கக்கோரி ஈரோடு மாநகராட்சி லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

22/Mar/2021 06:37:53

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாநகராட்சி 54-ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாடதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஈரோடு மாநகராட் சியின் குடிநீர் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி 54-ஆவது வார்டுக்கு உள்பட்ட குந்தவை வீதி சீதாகாதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 3 மாதமாக  தண்ணீர் சரியாக விநியோகிக்கப்படவில்லையாம். ஒரு சில வீடுகளுக்கு தண்ணீர் வந்தால் ஒரு சில வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல்  அவதி அடைந்தனர். இப்பிரச்னை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்ததையடுத்து மாநகராட்சி சார்பில் இந்த பகுதி மக்களுக்கு தினமும் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக  இந்த தண்ணீர் லாரிகளும்  சரியாக வரவில்லை. இதனால் இப்பகுதி பொது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை  மாநகராட்சி சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்காக வாகனம் வந்தது. இந்த வாகனத்தை 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைபிடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் பகுதியில் மீண்டும் குழாய் மூலம் சீரான முறையில் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

Top