logo
 தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

03/Mar/2021 11:51:10

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும் கொரோனா  தடுப்பூசி போட  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கொவைட்-19  தடுப்பு ஊசி வழங்கப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு மற்றும் சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன்  ஆகியோர் சென்னையிலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக புதழன்கிழமை ( 3.3.2021)  நடத்திய  ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர்  மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான  பி. உமாமகேஸ்வரி கூறியதாவது:


தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வருகிற  6.4.2021 அன்று நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களுக்கும் கொவைட் தடுப்பூசி போட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கொவைட் தடுப்பூசி  போடும் பணி குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

 தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் தவறாமல் கோவிட் தடுப்பூசி  போடவும், இப்பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, கையுறைகள் போன்ற தேவையான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் உரிய பணியாளர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கவும், வெப்பமாணி கருவியின் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல்வெப்பநிலையில் மாற்றம் இருப்பவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்களிக்கச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்  ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், பொது சுகாதார துணை இயக்குநர்கள்  பா. கலைவாணி, விஜயக்குமார், மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Top