logo
ஈரோடு சக்திதேவி அறக்கட்டளையின் ஐம்பெரும் விழாவில் ரூ56.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ஈரோடு சக்திதேவி அறக்கட்டளையின் ஐம்பெரும் விழாவில் ரூ56.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

21/Mar/2021 10:29:10

ஈரோடு, மார்ச்:  ஈரோட்டில்  நடைபெற்ற சக்திமசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளையின் 21-ஆவது ஐம்பெரும் விழாவில்  ரூ56.61 லட்சம் மதிப்புள்ள  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி தலைமை வகித்து பேசினார். மலர்க்கொடி ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சக்திதேவி அறக்கட்டளையின் தளிர் திட்டத்தின் மூலம், மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று சிறப்பாக பராமரித்து வருவோருக்கு, மரங்களின் காவலர் விருதினை, மத்திய கலால் மற்றும் சேவைவரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் சி.ராஜேந்திரன் வழங்கினார். மேலும், மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை புரிந்து வரும் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதினை அவர் வழங்கினார். 

விழாவில் ஏற்புரையாற்றி மருத்துவர் வி.எஸ்.நடராஜன் பேசியதாவது: கடந்த 2012-இல் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது, சக்திமசாலா நிறுவனத்தினர் பாராட்டு விழா நடத்தினர். 2013-இல் சென்னையில் கொங்கு சங்க ஆண்டு விழாவில், முதுமையில் நலமாக வாழ என்ற நூலை வெளியிட்டார்கள். அடுத்ததாக, 2017-இல் முதியோருக்கான அறக்கட்ட ளை தொடங்கியபோது, ஒரு பெரிய தொகையை எனது அறக்கட்டளைக்கு அளித்து ஊக்குவித்தனர். அவர்கள் போட்ட அடிக்கல், இன்று பெரிய கட்டிடமாக வளர்ந்து வருகிறது.

 என் வாழ்நாளில் அதனை மறக்க முடியாது. நான், முதுமையில் நலமாக வாழ 100 வழிகள் என்ற எனது குறுநூலில், கடந்த 40 ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்களை எழுதியுள்ளேன். அதை வெளியிட தேவையான செலவுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன்.

கடந்த 40 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் செய்ய முடியாததை, ஒரு அறக்கட்டளையால் செய்ய முடிகிறது. முதுமை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு பருவம். இதனை முதியோர் உணர்ந்து கொள்ள வேண்டும். முதுமையில் நோய் இன்று வாழ்வதற்காக, வரும்முன் காப்போம் என்ற திட்டத்தை ஏற்படுத்தினேன்.

முதுமையில் நலமாய் வாழ்வதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் முதியோர் நல மையங்களைத் தொடங்கத் திட்டமிட்டேன். முதியோர் கீழே விழுவது என்பது கொடுமையான செயல். கீழே விழுந்தால் தலையில் தலையில் அடிபட்டு மரணம் கூட ஏற்படலாம். எலும்புமுறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகவும் இருக்க நேரலாம். இதைத் தடுக்க ஒரு குறும்படம் எடுத்து, நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெளியிட்டு வருகிறேன்.

முதியோருக்கு நோய் வரும் முன் காக்க வேண்டும் என்பதற்காக, கால முறைப்படி மருத்து வப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். முதுமையில் பல நோய்கள் எவ்வித அறிகுறியும் இல்லாமல் மறைந்து இருக்கும். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை மருத்து வப் பரிசோதனை செய்தால், நோய் வராமல் தடுக்க முடியும். நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதோடு, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

 முதியோருக்கு உணவும், உடற்பயிற்சியும் இரு கண்கள் போன்றவையாகும். முதியோர் அனைவரும் கண்டிப்பாக, நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியோருக்கு கரோனா தொற்று வரவில்லை. நிமோனியா பாதிப்பும் வரவில்லை. தமிழகத்தில் எல்லா முதியவர்களுக்கும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் இலவசமாக நிமோனியா தடுப்பூசி போட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். 

இதனை ஏற்று அரசு நடத்தும் முதியோர் மையங்களில் வசிப்போருக்கு ரூ 1.65 கோடி மதிப்பீட்டில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னை அரசு கல்லூரி மருத்துவமனையில் முதியோர் பிரிவில் இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடப்படுகிறது. முதியோர் அவமதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை அரசு ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி முதியோரை அவமதிக்கக்கூடாது என்பதற்காக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் ஏற்கப்படுகிறது.

எனது அறக்கட்டளை ஈரோட்டில் காசியண்ண கவுண்டர் மருத்துவமனையில் எங்களது அறக்கட்டளை சார்பில், ஒரு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முதியோருக்குத் தேவையான உபகரணங்களைத் தயார் செய்ய வேண்டுமென, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். 

முதுமை நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்தாவிட்டால், இயலாமையும், ஊனமும் ஏற்படும். இதன் மூலம் மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முதுமையில் ஒருவரைச் சார்ந்து இருக்கும் கட்டாயம் ஏற்படுவது கொடுமையானது. அதைத் தடுக்க எங்களது அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.  70 வயதைக் கடந்த முதியோர் கீழே விழுந்து விடாமல் இருக்கும் வகையிலான பயிற்சியை அளிக்கும் மையம் தேவையாய் உள்ளது. அதனை சக்திதேவி அறக்கட்டளையினர் தொடங்க வேண்டும். 

இத்தகைய, முதியோர் மறுவாழ்வு மையம் மூலம் குறைந்த கட்டணத்தில் பிசியோதெரபி பயிற்சி வழங்கலாம். உடல்பருமன், முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். முதியோருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் இதுபோன்ற மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். இது போன்ற மையம் தொடங்கப்பட்டால், மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோரை நான் வழங்கவும் தயாராக உள்ளேன் என்றார்.

சக்திதேவி அறக்கட்டளை சார்பில் நேற்றைய விழாவில், டாக்டர் வி.எஸ். நடராஜன் ஜெரியாட்டிக் பவுண்டேசன், ஈரோடு இமையம் காப்பகம், சென்னை கொங்கு டிரஸ்ட் ஆகிய தொண்டு நிறுவனங்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.56.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பாரதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியின்  தாளாளர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அரிமா என்.முத்துசாமி ஆகியோர், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை கலாவதி, ச.சத்தியசெல்வி ஆகியோரைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.  ஏற்பாடுக ளை சக்திதேவி அறக்கட்டளை நிர்வாகிகள் சாந்தி துரைசாமி, செந்தில்குமார், தீபா செந்தில்குமார், எம். இளங்கோ, ஜி.வேணுகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 


Top