logo
பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

18/Mar/2021 11:32:31

புதுக்கோட்டை, மார்ச்: முதல்வர் பழனிசாமியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

புதுக்கோட்டையிலுள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதசார்பற்ற கூட்டணி சார்பில் புதுக்கோட்டை தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்து ராஜா, திருமயம் தொகுதியில் எஸ். ரகுபதி, விராலிமலை தொகுதியில் தென்னலூர் பழனியப்பன், ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோருக்கு  உதய சூரியன் சின்னத்திலும், அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தம்பி எஸ்.டி.இராமச்சந்திரனுக்கு கைசின்னத்திலும்,  கந்தர்வகோட்டை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு அரிவாள் சுத்தியல் சின்னத்திலும்  வாக்களித்து பெருவாரியான வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டு வந்துள்ளேன். 

 நான் பழனிசாமியைப் போல வந்தவர்  அல்ல, எனக்கு  50ஆண்டு கால  அரசியல் பயணம் உண்டு.  கட்சியின் சாதாரண உறுப்பினராக இருந்து படிப்படியாக  இந்த இடத்துக்கு வந்தவன் நான். விராலிமலை சுப்பிரமணியர் கோயில் தேரோட்டத்தை 22ஆண்டுகளுக்குப் பின் நடத்திக்காட்டியவர் கலைஞர்.  புதுக்கோட்டை மாவட்டத்தை உருவாக்கியப் பெருமை கலைஞருக்கு உண்டு.  காவிரி குடிநீர் திட்டத்தை  கொண்டு வந்த பெருமையும் திமுகவுக்கு உண்டு.

   பெண்கள்  பயன்பெறும் வகையில் திருமண உதவித் திட்டம்,  மகளிர் சுய உதவி குழு என பல்வேறு திட்டங்களை தொடங்கியது திமுக அரசுதான்.  திமுக காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்கள் .அதிமுகவில் ஒருவர் ஜெயித்தாலும் அது பாஜக.  எனவே தமிழகத்தில் பாஜகவை நுழைய விடக்கூடாது . அதனால் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது. 

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பியும் பாஜக எம்பி யகவே உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ். நீட் தேர்வு ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை  எதிர்த்தவர்  ஜெயலலிதா. அவர் மறைவிற்குப் பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் அத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கி துரோகம் செய்துள்ளனர். 


மக்கள் நலமாக இருக்க வே மக்கள் நல்வாழ்வுத்துறை என்று ஒரு துறை ஒதுக்கப்பட்டது.  அதில் அமைச்சராக இருப்பவர் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்துள்ளார் . சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை தலைவருக்கு குட்கா விற்பனைக்காக மாமூல் வழங்கப்பட்டுள்ளது. 

ஆர்.கே .நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினரின் பணப்பட்டுவாடாவால் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதற்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது . கொரோனாவை கட்டுப்படுத்தாமல் அதிலும் அமைச்சர் கொள்ளை அடித்துள்ளார் . தற்போது  இரண்டாவது அலை வருவதால் அனைவரும் முககவசம்  அணிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றார் மு.க.ஸ்டாலின்.

 


Top