logo
கொரோனா விதி மீறல்:ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 100 பேருக்கு அபராதம் விதிப்பு

கொரோனா விதி மீறல்:ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 100 பேருக்கு அபராதம் விதிப்பு

18/Mar/2021 04:46:08

ஈரோடு, மார்ச்: கொரோனா விதி மீறல் தொடர்பாக :ஈரோடு மாநகராட்சி பகுதியில் தினமும் 100 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல்  அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீவிர  தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதித்தவர்களின்  தினசரி எண்ணிக்கை கூடுவதும்

 குறைவதுமாக உள்ளது. முக கவசம் அணியும் பழக்கமும் பெரிதும் குறைந்துவிட்டது. சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான  சி.கதிரவன் ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம்  அணிந்து வரவேண்டும் இல்லையென்றால். ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். 

இதனையடுத்து சுகாதார துறையினர், வருவாய்த் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் ஆகியோர் ஒன்றிணைத்து மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கியமான பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் தினசரி முகக் கவசம் அணியாமல் வரும் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர  பேுருந்துகளில் பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் அந்தப் பயணிக்கு  ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் அந்தப் பயணியை  பேருந்துக்குள் அனுமதித்ததற்காக  பேருந்து நடத்துனருக்கு  ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

 மேலும் கடைகள் வணிக நிறுவனங்கள் போன்றவற்றை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழி முறைகள் பின்பற்றப் படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு ரூ.500 முதல் 5000 வரை அபராதம் விதித்து வருகின்றனர். ஒரு சிலர் முக கவசத்தை கழுத்திற்கு கீழ் அணிந்து செல்கின்றனர். 

இது போன்றவர்களை அதிகாரிகள்   முக கவசத்தை முறையாக அணிய வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு முத  கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறையும் வகையில் மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்களும், சுகாதாரத்துறையினரும்  தெரிவித்துள்ளனர்.

Top