logo
வீடு வீடாக பரிசோதனை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை  வழங்கிய அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்.

வீடு வீடாக பரிசோதனை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை வழங்கிய அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்.

31/May/2021 10:57:05

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறிய உதவும் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளைஉள்ளாட்சி அமைப்புகளுக்கு  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  (31.05.2021) திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினர்.

 பின்னர் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் வீடு வீடாக சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று  வருகிறது. இப்பணியில் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை மதிப்பீடு செய்ய பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியும், உடல் வெப்பநிலையை அளவிட தெர்மல் ஸ்கேனர் கருவியும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இக்கருவிகள் மூலம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இப்பணியினை மேற்கொள்பவர்கள் முகக்கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் பொதுமக்களை கண்காணிக்க வேண்டும்.

தமிழக அரசு  எடுத்துவரும் சிறப்பான  நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டதை போன்று இரண்டாம் தவணையாக ரூ.2,000 பொதுமக்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

கோவிட் தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போட செய்ய வேண்டும். தடுப்பூசி  குறித்தும்  களப்பணியாளர்கள் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளுக்கு கோவிட் பரிசோதனை செய்து, அதன் பிறகே சிறையில் அடைக்கப்படுகின்றனர். சாதாரண அறிகுறி உள்ளவர்கள் சிறைச்சாலை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கோவிட் தடுப்பூசியும் போடப்படுகிறது என்றார் அமைச்சர் ரகுபதி.


பின்னர்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்  மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. கோவிட் நோயாளிகளுக்கு ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாடு மற்றும் மூச்சுத்திணறலை கண்டறிய இக்கருவிகள் பயன்படும்.

ஊராட்சிகளில் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை பயன்படுத்தும் நபர்கள் இதனை முறையாக கையாள வேண்டும். தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் முதலில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கோவிட் சிகிச்சை முடித்து குணமடைந்து வீட்டு தனிமையில் இருப்பவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

 மாவட்டத்தில் கோவிட் சிகிச்சை வழங்கும் அனைத்து  அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கோவிட் கவனிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிட் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

முன்களப்பணியாளர்களுக்கு  அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் கிடைக்க செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். எனவே அரசு கூறும் நோய் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் அனைவரும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னத்துரை , மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், பொதுசுகாதாரத் துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயக்குமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top