logo
கொரோனா தொற்று அதிகரிப்பு: முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகரிப்பு: முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

16/Mar/2021 04:28:53

புதுக்கோட்டை, மார்ச்:கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் முககவசம் அணியாம் வெளியில் வரக்கூடிய நபர்களுக்கு ரூ.200 -அபராதம் விதிக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  வெளியிட்ட அறிக்கை:     கடந்த டிசம்பர் 2019 முதல்  கொரோனா  பெருந்தொற்று நோய் உலக அளவில் பரவி பெரும் தாக்கத்தை எற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்த் தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்தது.

ஆனால் தற்பொழுது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று  இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகளையும் வழங்கி வருகிறது.

மேலும், பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல், கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும்  அவசியமின்றி கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை  கடைப்பிடிக்க வேண்டுமென பொதுமக்களை அரசு வலியுறுத்தி வருகிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்று நோய் தீவிரமாக பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க  வேண்டுடுமெனவும், அவற்றை பின்பற்ற தவறும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொதுசுகாதாரச்சட்டம் 1939-இன்படி அரசு அபராதம் விதிக்கப்படும். எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும்  பொதுமக்களுக்கு  ரூ.200-ம், சமூக இடைவெளியினை கடைபிடிக்காத  பொதுமக்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு  முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள்  வந்தால் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5,000ம் அபராதம் விதிக்கப்படும். 

மேலும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களின்  உரிமையாளர்களும்  கொரோனா  பெருந்தொற்று நோயிலிருந்து தங்களது பணியாளர்களையும், பொதுமக்களை பாதுகாக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 



Top