logo
ஈரோட்டில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

ஈரோட்டில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

12/Mar/2021 09:31:48


ஈரோடு, மார்ச்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மேலும் பரவி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ .200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

 இந்த நிலையில் வெள்ளிக்கிழமை  ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறித் தினசரி சந்தை, பேருந்து நிலைய வளாக வணிக நிறுவ னங்கள், பேருந்துகள் ஆகியவற்றில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

ஈரோடு வ.உ.சி பூங்கா தினசரி காய்கறிச் சந்தை வளாகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர்    முக்கவசம் அணியாத காய்கறி வியாபாரிகளிடம் அபராதம் விதிக்க  நடவடிக்கை எடுத்தார். முக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை வழங்கக் கூடாது என்றும், முக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்தால் நாளை முதல் கடைகள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து பூங்கா சாலையில் உள்ள ஓட்டலில் சோதனை மேற்கொண்ட அலுவலர்கள் முகக்கவசம் அணியாமல் பணியாற்றிய ஊழியர்கள், விதிமுறைகளின்றி செயல்பட்டதாலும், கிருமி நாசினி  வைக்காமல் நடத்தப்பட்டதால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தைக் கட்டாமல் போனால் குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 இதைப்போல் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாத மேலும் நான்கு உணவு விடுதிகளுக்கு தலா ரூ 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் முக கவசம் அணியாத பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன் முகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்துகளில் அனுமதிக்கக் கூடாது என்றும் ஆட்சியர்  வலியுறுத்தினார். 

மேலும் கோரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத ஒரு செல்போன் கடை மற்றும் உதிரி பாக கடை என இரண்டு கடைகளை பூட்டி சீல் வைக்க  ஆட்சியர்  உத்தரவிட்டார். அதேபோல் மேட்டூர் சாலையிலுள்ள துணிக்கடையையும் சோதனையிட்ட அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்றாடாவிட்டால்  கடும்  நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்தார். இவ்வாறாக இன்று ஐந்து கடைகளுக்கு தலா  ரூ.5000 வீதம் ரூ 25,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இரண்டு கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.மேலும்  முகக் கவசம் அணியாமல் வந்த 50 பேரிடம் தலா ரூ 200 அபராதம்  வசூலிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  ஆட்சியர் சி.கதிரவன்  கூறியதாவது: தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் முககவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பொது மக்கள் இதற்கு போதிய ஒத்துழைப்பு தராததால் ரூ .200 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவக் கூடும் என்று சொல்கிறார்கள்.

தேர்தல் காலம் என்பதால் இது மேலும் அதிகரிக்க கூடாது என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக கவசமும், சமூக இடைவெளியும் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி  சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்  என்றார்  அவர்

Top