logo
கர்நாடக மாநிலத்திலிருந்து ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த 4 பேர் கைது 550 பாட்டில்களை பறிமுதல்

கர்நாடக மாநிலத்திலிருந்து ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த 4 பேர் கைது 550 பாட்டில்களை பறிமுதல்

02/Jun/2021 01:36:28

ஈரோடு, ஜூன்:கர்நாடக மாநிலத்திலிருந்து ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த 4 பேர் கைது 550 பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 தளர்வுகளற்ற கொரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் கூடுவதைத் தவிர்த்திடும் வகையில் அனைத்து வகை வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது போல் அரசு மதுபானக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பேருந்து  மார்க்கமும் முடக்கத்தின் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடந்த மூன்று வாரங்களாக மதுபானப் பிரியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக  சிலர்,  ரெயில் மார்க்கமாக கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானப் பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 

மைசூர் தூத்துக்குடி விரைவு ரெயிலில் மதுபானப் பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ஈரோடு ரெயில்வே காவல்துறை யினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு ரயில்நிலையம் வந்த மைசூர் தூத்துக்குடி விரைவு ரயிலில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில்  4 பேர் மதுபானப் பாட்டில்களை தங்களைது கைப்பைகளில் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. 


இதனைத் தொடர்ந்து நால்வரையும் ஈரோடு ரயில்வே காவல்நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கொண்டு வந்த 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட மதுபானப் பாட்டில்களையும், மதுரையைச் சேர்ந்த மணி,பரமசிவம் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரிடமிருந்து 72 லிட்டர் கொள்ளளவு கொண்ட மதுபானப் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 இவர்களிடமிருந்து மொத்தம்  94 லிட்டர் கொள்ளளவு கொண்ட 550 பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு மதுபானப் பாட்டில்களை கடத்தி வந்த நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மைசூர் தூத்துக்குடி விரைவு ரயிலில் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே ஈரோடு ரயில்வே போலீசார் ரயிலை  சோதனையிட்டு வருகின்றனர்.

Top