08/Mar/2021 09:46:38
ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்பாளையம் வருவாய்துறை சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி அனைவரும் வாக்களித்து வலிமையான மக்களாட்சியை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக தேர்தல் ஆணையம் பல்வேறு விதங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வருவாய்துறை சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டியும் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் அனைவரும் வாக்களித்து வலிமையான மக்களாட்சியை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மினி மாரத்தான் ஒட்டப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.
கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் பழனிதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் கச்சேரிமேடு பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் தொடங்கி காவல்நிலையம், நீதிமன்ற வளாகம், ல.கள்ளிப்பட்டி வழியாக நல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக காராத்தே சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் பள்ளி மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். இவ்விழாவில் தாசில்தார் தியாகராஜு ,வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.