logo
புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு  கோவிட் நிவாரண பொருள்கள்: அமைச்சர் ரகுபதி  வழங்கல்

புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண பொருள்கள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

31/May/2021 10:38:22

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டையில்  பொதுமக்களுக்கு கோவிட் நிவாரணப் பொருட்களை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை வழங்கினார்.

புதுக்கோட்டை நகராட்சி மக்கள் மன்றத்தில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, புதுகை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா ஆகியோர் முன்னிலையில்  (31.05.2021) திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி   பொதுமக்களுக்கு கோவிட் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோவிட் தொற்று காலத்தில் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மக்கள் மன்றத்தில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய கோவிட் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்கு ஊரடங்கு காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். இதேபோன்று பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் கோவிட் நிவாரண நிதி முதல் தவணை ரூ.2,000 ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது இரண்டாம் தவணையாக ரூ.2,000 விரைவில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.

கோவிட் தொற்று காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கோவிட் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் கோவிட் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதனால் கோவிட் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பை தவிர்க்கலாம்.கோவிட் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றார் அமைச்சர் ரகுபதி.

நிகழ்வின் போது, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் நைனா முகமது உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top