logo
சோதனை என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு  செய்தால் போராட வேண்டிய நிலை வரும்: விக்கிரமராஜா

சோதனை என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்தால் போராட வேண்டிய நிலை வரும்: விக்கிரமராஜா

07/Mar/2021 10:51:54

புதுக்கோட்டை, மார்ச்: தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி  சோதனை என்ற பெயரில் சிறு வியாபாரிகளை தொந்தரவு செய்தால்  சாலையில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா. 

 புதுக்கோட்டையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 38-ஆவது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பாக  சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறியதாவது: 

 அரசியல்வாதிகள் எங்கெங்கு பணத்தை கொண்டு சென்று வைக்க வேண்டும் அங்கெல்லாம் வைத்துவிட்டார்கள். ஆனால் தற்போது வியாபாரத்திற்கு பணம் எடுத்துச் செல்லும் வணிகர்களை அதிகாரிகள் வரம்பு மீறி நடத்துகின்றனர்  சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சிறு வியாபாரிகளை கூட அதிகாரிகள் தொந்தரவு செய்து வருகின்றனர். முறையான ரசீதுடன் பணம் எடுத்துச் சென்றாலும் ஏதாவது காரணம் கூறி பணத்தை பறிமுதல் செய்கின்றனர் . 

இதே நிலை நீடித்தால் தேர்தல் காலத்தில் வணிகர்கள் சாலையில்  இறங்கி போராடும் நிலை ஏற்படும். மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க செக் அல்லது டி.டி கொடுக்க முடியாது. பணம் தான் கொண்டு செல்ல வேண்டும். தற்போது உள்ள விலைவாசி உயர்வு காரணமாக  வியாபாரத்திற்கு  காய்கறி வாங்குவதென்றால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 

கடலை மிட்டாய், பொரி உருண்டை வியாபாரிகளிடம் கூட  பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். கொரோனாகாலத்தில் உயிரிழந்த 32 வியாபாரிகளுக்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் . கடந்த பத்தாண்டுகளாக வணிக நல வாரியம் முடக்கப்பட்டு விட்டது. விவசாயிகள் போராட்டத்திற்கு வியாபாரிகள் எப்போதும் துணை நிற்போம் என்றார் ஏ.எம். விக்கிரமராஜா.

Top