logo
 தாய்மொழிக்கு நாம் உரிய மரியாதை தருவதில்லை:  கவிஞர் புதுகை வெற்றிவேலன்

தாய்மொழிக்கு நாம் உரிய மரியாதை தருவதில்லை: கவிஞர் புதுகை வெற்றிவேலன்

06/Mar/2021 04:47:07

புதுக்கோட்டை, மார்ச்:  தாய் மொழியான தமிழ்மொழிக்கு  தமிழர்கள் உரிய மரியாதை தருவதில்லை என்றார்  கவிஞர் புதுகை வெற்றிவேலன்.

 புதுக்கோட்டை அருகே பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து உலக தாய்மொழி தினத்தை {5.3.2021} சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் கொண்டாடினர்.

நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் வீரப்பன் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் சுப. முத்தழகன் வரவேற்றார். வாசகர் பேரைவை செயலர் சா.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  புதுகை வெற்றிவேலன்,  உலக தாய்மொழி தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:

 நாம் நம் தாய்மொழியான தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தருவதில்லை   வங்காளதேசத் திற்கு முன்னதாகவே தமிழகத்தில் 1930 களில் மொழிக்கான போராட்டம் நடத்தி  உயிர் தியாகங்கள் செய்தவர்கள் தமிழர்கள். இத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகிய  நாம் சரியான முன்முயற்சி எடுக்காததால் வங்காள தேசம் அந்தப் பெருமையைத் தட்டிச்சென்றுவிட்டது. 

அதேபோல் தாகூரும் பாரதியும் சமகாலத்தவர்கள் என்றாலும் தாகூர் நோபல் பரிசு பெறச் செய்து வங்காள மொழியை உலகரியச் செய்தனர். ஆனால் பாரதி இன்னும் உரிய இடத்தைப் பெறாமல்தான் உள்ளார். மாணவர்கள் தமிழ்மொழியை நன்கு கற்பதோடு தமிழை உலக மொழியாக்க உறுதி எடுக்க வேண்டும் என்றார்.


   பின்னர் வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் வாழ்த்திப் பேசுகையில், தாய்மொழி தினம் உருவான வரலாறு பற்றி்யும்   1952 ஆம் ஆண்டு பிப்வரி 21 ஆம் நாள் கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழிக்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் மீது  நடத்தப்பட்ட  துப்பாக்கி சூட்டில் 4 மாணவர்கள் உயிரிழந்ததே இந்த நாள் உருவாகக் காரணம்.

  மாணவர்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்ப மிடவும், எதிர்காலத்தில் தமிழ் பெயர்களையே குழந்தைகளுக்கு வைப்பது என்று உறுதிமொழி யெடுத்துக்கொள்ள வேண்டுமென்றும்  குறிப்பிட்டார். இதில், கல்லூரித் தலைவர் ரமா சிங்காரம், துணைத் தலைவர் சிங்காரம் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் வை. ஸ்ரீதர் நன்றி கூறினார்.


Top