logo
ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசல், எரிவாயுவை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை: மத்திய அமைச்சர் தகவல்

ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசல், எரிவாயுவை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை: மத்திய அமைச்சர் தகவல்

05/Mar/2021 10:42:49

ஜிஎஸ்டி வரம்புக்குள்  பெட்ரோல், டீசல், எரிவாயுவை  கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் வி.கே.  சிங் தெரிவித்துள்ளனா்.

மதுரை ஐராவத நல்லூரில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வருகை தந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர்வி.கே..சிங் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கப் படும்.

தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஏற்ற இறக்கங் களுக்கு உள்பட்டது. சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

 பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. எனினும், இதற்கு அரசியல் ரீதியில் அதிக ஆா்வம் காட்டப்படாத நிலைதான் உள்ளது. கடந்த 2011 - 2014 ஆகிய ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலைரூ.1,240 ஆக இருந்தது. தற்போது ரூ.750 என்ற அளவில்தான் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஜிஎஸ்டி.க்குள் பெட்ரோல், டீசல், எரிவாயு கொண்டுவரப்பட்டால் கிடைக்கும் நன்மைகள்:

சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் (ஜிஎஸ்டி) பெட்ரோல் கொண்டுவரப்படும்பட்சத்தில் நாடு முழுவதும் அதன் சில்லறை விற்பனை விலையானது ரூ.75-ஆக குறையும். உலக அளவில் பாா்க்கும்போது கச்சா எண்ணெய் தயாரிப்புகளின் விலையை அதிகமாக வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோன்று, டீசல் விலையும் லிட்டா் ரூ.68-ஆக குறையும்.

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலை குறைக்கப்படுவதால் மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கே வருவாய் இழப்பு ஏற்படும். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் மட்டுமே.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை 60 டாலா் என்ற விலை அடிப்படையிலும், செலாவணி மாற்று விகிதம் டாலருக்கு ரூ.73 என்பதன் அடிப்படையிலும் இந்த மதிப்பீடு மேற்கொள் ளப்பட்டுள்ளதாக எஸ்பிஐ பொருளாதார வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். 


Top