logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

03/Mar/2021 12:41:23

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு  கொரோனா  தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 கோவிட்-19 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 4,196 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் (நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்) அனைவருக்கும் திங்கள்கிழமை (மார்ச்-1) முதல் கொரோனா  தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு மையங்களில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளான மா.மலர; மருத்துவமனை, முத்துமீனாட்சி மருத்துவமனை, முத்துராஜா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மணிமேகலை மெடிக்கல் சென்டர், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதுகை ஸ்டார் மருத்துவமனை, ஸ்ரீதுர்க்கா மருத்துவமனை, ஸ்ரீவிஜய் மருத்துவமனை, ஸ்ரீமீனாட்சி பாலி கிளினிக் உள்ளிட்ட 9 தனியாரர் மருத்துவமனைகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு  ஒரு தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு அதிகபட்சமாக ரூ.250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் , ஓட்டுநர் உரிமம், ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் (நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்) ஆகிய அனைவரும் பயனடையலாம். 

Top