logo
விவசாயிகள் மனம் குளிர்ந்தால்தான் உணவுப் பஞ்சம் ஏற்படாது- முதல்வர எடப்பாடி பழனிசாமி பேச்சு

விவசாயிகள் மனம் குளிர்ந்தால்தான் உணவுப் பஞ்சம் ஏற்படாது- முதல்வர எடப்பாடி பழனிசாமி பேச்சு

09/Feb/2021 11:59:09

விவசாயிகள் மனம் குளிர்ந்தால்தான்  உணவுப் பஞ்சம் ஏற்படாது. அதனால்தான் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வேலூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மத்தியில் பேசியது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு விவசாயியான நான் முதல்வராக பொறுப்பேற்ற போது கிராமத்தில் பிறந்தவர் ஓராண்டுகூட பதவியில் இருக்க முடியாது என கணக்குப் போட்டனர். அந்த எண்ணங்களை பொய்யாக்கி அதிமுக அரசு 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின், விவசாயிகளின் வாயில் விஷத்தை ஊற்றக் கூடிய முதல்வர் என்று என்னை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இந்த எண்ணமே திமுக எதிர்கட்சி வரிசையில்கூட அமரவிடாது.

விவசாயியான எனக்கு விவசாயத்துக்கு எந்தந்த நேரத்தில் என்னென்ன உதவிகள் தேவை என்பது நன்கு தெரியும். அதனை உணர்ந்ததால்தான் புயலாலும், பருவமழை பொய்த்த தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த ரூ.12,110 கோடி கடனை ஒரே அறிவிப்பு மூலம் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிப்பை ஆட்சியில் உள்ள அதிமுகதான் நிறைவேற்ற முடியும். ஆனால், ஆட்சியில் இல்லாத திமுக, கடந்த மக்களவைத் தேர்தலின்போது விவசாயக் கடன் ரத்து என பொய்யான வாக்குறுதியை அளித்து வெற்றிபெற்றுவிட்டனர்.

அதேபோல், முதல்வர் எண்ணத்தில் உள்ள ஸ்டாலின் அடுத்த 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனக்கூறுகிறார். அதற்காக அதிமுக அரசையும், முதல்வர், அமைச்சர்களை திட்டமிட்டே குறை கூறிக்கொண்டுள்ளார். இந்த எண்ணத்தாலேயே திமுக மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். ஆனால், அதிமுக ஆட்சியில் மக்கள் தான் முதல்வர். மக்கள் விடுக்கும் உத்தரவுகளைத் தான் இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

கருணாநிதியின் மகன் என்பதாலேயே ஸ்டாலினுக்கு திமுக தலைவர் பதவி கிடைத்துள்ளது. ஆனால், நான் விவசாய குடும்பத்தில் பிறந்து கட்சிப்பணியிலும், அரசுப்பணியிலும் உழைத்து உழைத்துத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அத்தகைய உழைப்பின் கஷ்டம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாட்டு மக்களுக்கு உழைக்க எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உழைப்பின் மூலம் மக்களுக்கு ஒரு சதவீதம் நன்மை கிடைக்கும் என்றால் நான் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன். ஸ்டாலின் போல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவது மட்டுமே அதிமுகவின் லட்சியமாகும்.

அதிமுக அரசு மகளிருக்கு தொடர்ந்து பாதுகாவலான விளங்கி வருவதாலேயே மகளிர் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை இடம்பிடித்துள்ளன. ஆனால், அராஜக கட்சியான திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அவர்கள் நிம்மதியாக வாழ முடியாது.

விவசாயிகள் மனம் குளிர்ந்தால்தான் உணவுப் பஞ்சம் ஏற்படாது. அதனால்தான் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதுடன், வண்டல் மண் இயற்கை உரமாக பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டதன் மூலம் விவசாயிகள் இருபெரும் நன்மைகளை அடைந்து வருகின்றனர். அந்தவகையில், மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் 50 ஆண்டு கால கோரிக்கையான 65 கி.மீ நீளத்துக்கு ரூ.5 கோடிக்கு சாலை அமைக்க அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. அமைச்சர் கே.சி.வீரமணி விடுத்த கோரிக்கையை ஏற்றுத்தான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியின் எம்எல்ஏ திமுக-வால்தான் இத்திட்டம் வந்திருப்பதாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார்.  இதேபோல், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தடைபட்டிருந்த பத்திரப்பள்ளி நீர்த்தேக்க திட்டம் ரூ.100 கோடியில் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தவிர, 2006 - 2011-இல் நிலவிய கடுமையான மின்வெட்டு நிலை மாறி தடையில்லா மின்சாரமும் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயம், தொழிற்சாலை உற்பத்தி மேம்பட்டு பொருளா தாரமும் வளர்ச்சியடைகிறது. இதன்மூலம், அனைத்து துறைகளிலும் தேசிய அளவில் விருது பெற்று தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது என்றார் முதல்வர் பழனிசாமி.

தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்டச் செயலர் த.வேலழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top