logo
50 தொகுதிகளில் கொமதேக  பலமான சக்தியாக இருப்பதால் அதற்கேற்ப இடங்களைப் பெறுவோம்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

50 தொகுதிகளில் கொமதேக பலமான சக்தியாக இருப்பதால் அதற்கேற்ப இடங்களைப் பெறுவோம்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

11/Jan/2021 09:34:51

ஈரோடு, ஜன: கொமதேக அதன் வலிமைக்கேற்ப தொகுதிகளை  பெற்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றார் அக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 ஈரோட்டில்  நடைபெற்ற கொமதேக மேற்கு மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு  மாவட்ட தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

 கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுசெயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் மேலும்  கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் சாயக்கழிவு பிரச்சனை,  ஐ.டி.பி.எல். திட்ட பிரச்னை, உயர் மின்கோபுரம் பிரச்னை, நூல் விலையேற்றத்தால் ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி என பல பிரச்னைகள் இருக்கும்போது, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்த அறிவிப்பையும் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. 

சட்டமன்ற தேர்தலில் கொமதேக. தனித்தும், தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என முதல்வர் பேசி இருக்கிறார். ஆனால், இன்னும் சில நாட்கள் பொறுத்து இருந்தால் அதிமுக வுக்கு இரட்டை இலை சின்னம் இருக்குமா? இருக்காதா? என்பது விரைவில் தெரியவரும். பாஜகவுடன் கூட்டணி என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்துள்ளனர். ஆனால், பாஜக  எடப்பாடி பழனிசாமியை இதுவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. 

 பாஜக  ரஜினிகாந்தை வைத்துக்கொண்டு ஏற்படுத்திய சலசலப்புகள் தற்போது தான் குறைந்துள்ளது. சசிகலா வரும் 27 ம் தேதி விடுதலை ஆவர் என செய்திகள் வெளியாகி உள்ளது. அவர், விடுதலைக்குபின்  அதிமுக வில் மீண்டும் சலசலப்பு ஏற்படும். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

 கடந்த காலங்களில் கொமதேக 72 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டுள்ளோம். 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை கொண்டிருக்கிறோம். கொமதேக வின் வலிமையை கூட்டணி தலைமை புரிந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய பலத்துக்கு ஏற்றவாறு தொகுதிகளை  கேட்டுப்பெறுவோம். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பேசுவதன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. 

எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பேச இன்னும் காலம் இருக்கிறது. பாஜகவின் அழுத்தம் காரணமாக வேளாளர் என்ற பெயரை சில சாதிகளுக்கு கொடுப்பதற்கு முதல்வர் பரிந்துரை செய்திருக்கிறார். இதனால் காலம் காலமாக வேளாளர் என்று அழைக்கப்பட்ட சாதியினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தேர்தலில் கண்டிப்பாக இருக்கும். 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்ற பேரத்திற்காக வன்னியர்களுக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் ராமதாஸ் என பேசி வந்தார். பிற்பட்ட சமுதாயத்தினர் இடையே இவருக்கு எதிர்ப்பு உருவானதால், இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளித்தால் போதும் என ராமதாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

 ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது ரசிகர்களே முடிவு செய்துவிட்டனர். அவர் படப்பிடிப்புக்கு கூட செல்லவில்லை. அவர் குறித்து பேச ஒன்றும் இல்லை என்றார் அவர். 


Top