logo
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை: ஆட்சியர்  எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

02/Mar/2021 09:36:17

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்  செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்துள்ளது.. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதிச்சீட்டுப் பெற்று இயக்கப்படும் பேருந்துகளில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989 விதி எண் 176   (2)-ல் கண்டுள்ள விவரங்கள் அனைத்தையும் கொண்டுள்ள பயணச் சீட்டுக்களை மட்டுமே பயணிகளுக்கு வழங்க வேண்டும். பயணச்சீட்டு கருவி மூலம் வழங்கப்பட்டாலும் அல்லது கையால் எழுதி வழங்கப்பட்டாலும் பயணச்சீட்டில் முழு விவரங்களும் பதியப்பட்டிருக்க வேண்டும். 

மேலும், அரசானையின்படி அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்ககும் பேருந்துகள் குறித்து  பொதுமக்கள் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலரின்  9384808384 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்  அளிக்கலாம்.


Top