logo
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

28/Feb/2021 05:56:16

ஈரோடு, பிப்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக மேற்கொண்டு வந்த காத்திருப்பு போராட்டம் அரசின் பேச்சு வார்த்தைக்குப்பின் ஒத்தி வைக்கப்பட்டது.


அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ .5 லட்சம் வழங்க வேண்டும். பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 22-ஆம் தேதி முதல் மாநில தழுவிய காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வநதனர்.

அதன்படி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில்  ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வநதனர்.  மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.. 

இந்நிலையில் அவர்களின் போராட்டம்  வெள்ளிக்கிழமை  5-ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நேரம் செல்ல செல்ல பல்வேறு பகுதியில் இருந்தும் அங்கன்வாடி ஊழியர்கள்  தாலுகா அலுவலகத்தில் திரண்டனர்.

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள்  நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்து பேசினர்.

இந்நிலையில்  வெள்ளிக்கிழமை மாலை அங்கன்வாடி ஊழியர்கள் பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால்  பிற்பகலில்  அங்கன்வாடி ஊழியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Top