logo
தேசிய மொழிகள் (22) அனைத்திலும் நாடாளுன்றத்தில் விவாதிக்கவும், கடிதப்போக்குவரத்துகள் நடத்தவும் கோரிக்கை

தேசிய மொழிகள் (22) அனைத்திலும் நாடாளுன்றத்தில் விவாதிக்கவும், கடிதப்போக்குவரத்துகள் நடத்தவும் கோரிக்கை

26/Feb/2021 08:41:57

ஈரோடு: தேசிய மொழிகள் (22) அனைத்திலும் நாடாளுன்றத்தில் விவாதிக்கவும், கடிதப்போக்குவரத்துகள் நடத்தவும் தகுந்த  தொழில்நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன்  பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: 

  நமது அரசியல் சட்டம் 22 இந்திய மொழிகளை தேசிய மொழிகளாக அரசியல் சட்ட 8-ஆவது அட்டவணையில் பட்டியலிட்டுள்ளது. அவற்றைத் தாய் மொழியாகக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் தங்கள் தாய்மொழியிலேயே கருத்துகளை முன் வைக்கவும், அதன் மீது விவாதம் செய்யவும், அந்த நடவடிக்கைகள் 22 தேசிய மொழிகளிலும் ஏககாலத்தில் இந்தி, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவுமான தொழில்நுட்ப ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும், தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின் போது நான் நாடாளுமன்றத்தில் எனது கருத்துகளை முன் வைத்தேன்.

 இதனால், தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடும் வலுப்படுவதோடு, தங்கு தடையில்லாமல் தங்கள் தாய்மொழியிலேயே கருத்துக்களை வெளியிடுகிற, விவாதிக்கிற ஜனநாயகத் தன்மையும் விரிவடைந்து செழுமையுறும்.இது குறித்து தாங்கள், துறை சார்ந்த நிபுணர்க ளின் ஆலோசனைகளைப் பெற்று,  ஆக்கப்பூர்வமான அடுத்த கட்ட நடவடிக்கை களை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென பலமாக வற்புறுத்துகிறேன்.

 அடுத்து இரண்டாவதாக நான் முன்வைக்க விரும்புவது, நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கான ஒன்றிய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்து முழுவதும் உறுப்பினர்களின் தாய்மொழி மூலமாக அமைய வேண்டும் என்றும், அதே போல் உறுப்பினர் தங்களது கடித போக்குவரத்து தாய்மொழி மூலமாகவே செய்வதற்கான விரிவான நிர்வாக ஏற்பாடுகளை பொறுத்தமான முறையில் காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறேன்.

வளர்ந்து விரிவடைந்துள்ள இன்றைய தொழில்நுட்பயுகத்தில் இவை எல்லாம் அசாத்திய மானதல்ல, சாத்தியமானதே ஆகும். இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கு தடையில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய, மக்களுக்கான கடமைகளை முழுமையாக நிறைவேற்ற, பரிபூரண வாய்ப்பேற்படும் என்பதையும் தாங்கள் கவனத்திற் குக் கொண்டு வருகிறேன். இது குறித்த தங்கள் ஆக்கபூர்வமான பதிலுக்காகக் காத்திருக் கிறேன்.


Top