08/Dec/2020 05:12:47
ஈரோடு- டிச: ஆயுர்வேத டாக்டர்களும் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தன. முறையான பயிற்சி இல்லாமல் ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து,இன்று நாடு முழுவதும் இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீதி ஆயோக் அமைத்துள்ள குழுக்களை கலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி,ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், இன்று(டிச.8) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரபிரபு தலைமை வகித்தார்.டாக்டர் சீனிவாசன், டாக்டர் முகமது அப்சர், இந்திய மருத்துவக் சங்கத்தின் சக்கரவர்த்தி பிரசாத் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவிச்சந்திர பிரபு கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வரும் 11-ஆம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனைகள் ,கிளினிக்குகள் மூடப்படும் என்றார்.