logo
வருவாய் அதிகமுள்ள கோயில்கள் தனியார் வசம் செல்லும் அவலம் தடுக்கப்படுமா?.. கோவில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை

வருவாய் அதிகமுள்ள கோயில்கள் தனியார் வசம் செல்லும் அவலம் தடுக்கப்படுமா?.. கோவில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை

25/Sep/2020 06:57:34

இது தொடர்பாக கோவில் பூசாரிகள் சங்க மாநிலத்தலைவர் பி. வாசு  வெளியிட்ட அறிக்கை:

கோவில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, ஒருசில அதிகாரிகளால் வருவாய் அதிகம் உள்ள சில கோவில்கள் தனியார் வசம் செல்ல உள்ளது.உதாரணமாக, திருச்சி மாவட்டம், தலமலை அடிவாரம் அஞ்சலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயண பெருமாள் திருக்கோவில் தனியாரால் நிர்வாகம் செய்யப்பட்டு தனி நபர்களால் உண்டியல் முதல், முடி காணிக்கை, கால்நடைகள் வரை தனியார் வசம் இருந்ததை இந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவந்து நிர்வாகம் செய்து வந்தது, இத்திருக்கோவிலுக்கு தானமாக வரும் மாடுகள் பூசாரிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தது.இந்தநிலையில், ஊராட்சி நிர்வாகத்திற்கும் அறநிலையத்துறை நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வட்ட நிர்வாக நடுவர் முசிறி வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் மேற்படி திருக்கோவிலுக்கு வரும் மாடுகளை, அரசு உத்தரவை மீறி அரசாணையை பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் மாடுகள் வழங்கப்படும் என்று வட்டார வருவாய் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பூசாரிகள் மற்றும் பூசாரிகள் நல சங்கங்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்காமலும், அரசாணைப்படி பூசாரிகளுக்கு மாடுகளை வழங்காமலும் வட்டார வருவாய் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக உத்தரவிட்டது பூசாரிகளுக்கு அளிக்கப்பட்ட பெரும் அநீதியாகும். பூசாரிகளுக்கு அளிக்கப்பட்ட இந்த அநீதியை இந்து சமய அறநிலையத்துறை கண்டுகொள்ளாமலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் பூசாரிகளுக்கு தானமாக வரும் மாடுகளை விலையில்லாமல் வழங்க வேண்டும் என்ற அரசாணை இருப்பதை வலியுறுத்தாமல் இருந்ததும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே திருக்கோவிலுக்கு வரும் தானப்பொருட்கள், காணிக்கை, மாடுகளை திருச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை ஊராட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது போல பின்வரும் காலங்களில் உண்டியல்களையும் ஊராட்சிக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிடும் என்றே தோன்றுகிறது. போராடி பெற்ற அரசாணையை மீட்டு எடுக்கவும், அரசாணைப்படி மாடுகளை பூசாரிகளுக்கு தொடர்ந்து வழங்கிடவும் நாம் அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டி வரும் சூழல் ஏற்படுமோ என்ற ஐயம் தோன்றுகிறது..எனவே இந்து சமய அறநிலையத்துறையும்,மாவட்ட நிர்வாகமும் பூசாரிகளின் கோரிக்கையை ஏற்று மேற்படி திருக்கோவிலுக்கு தானமாக வரும் மாடுகளை பூசாரிகளுக்கும் வழங்கிட நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்

 

Top