logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்  திட்டத்தை தொடங்கி வைத்தார்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

21/Feb/2021 03:07:20

புதுக்கோட்டை, பிப்:    காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்  திட்டத்தின் முதல்கட்டப் பணிகளை   தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை: காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டத்துக்குள்பட்ட குன்னத்தூரில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில் நடைபெற்ற விழாவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ். மணியன், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் முன்னிலையில்  காவிரி- வைகை-குண்டாறு ரூ.6941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு   முற்பகல் 11.30 மணிக்கு  முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.

அப்போது  முதல்வர் பேசியதாவது: தமிழக நீர்ப்பற்றாக்குறை மாநிலம். தண்ணீருக்காக நாம் அண்டை மாநிலத்தை நம்பியிருக்கிறோம். அந்த மாநிலத்திலுள்ள அணைகள் நிரம்பினால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள்.

அணைகள் நிரம்பினால்தான்  மேட்டூர் அணைக்க தண்ணீர் கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்  நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். நமது நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி தண்ணீரை சேமித்து வருகிறது. அப்படி சேமிக்கப்பட்ட நீர் முறையாக வேளாண் பெருமக்களுக்கு வழங்க வேண்டும்.

மேட்டூர் அணை கட்டியதிலிருந்து இதுவரை தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் அதை தூர்வாரியது அம்மா அரசுதான்.  குடிமராமத்து எனும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் மூலம் நமக்குக் கிடைக்கும் ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காத வகையில்  விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

ரூ.1417 கோடியில் 6,800 -க்கும் மேற்பட்ட  பொதுப்பணித்துறை குளங்களும், உள்ளாட்சித்துறை  மூலம்  சிறிய ஏரிகள், குளம் குட்டைகள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், நதிகள், ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரைத்தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியுள்ளோம்.

காவிரி நதி அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன். மிக அருமையான இந்தத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் குடியரசுத்தலைவர் உரையில் அத்திட்டத்தை இடம் பெறச் செய்துள்ளார். பிரதமருக்கு நன்றி பாராட்டுகிறோம். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தையும் இந்த அரசு நிறைவேற்றும். 

ஆனால், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உங்கள்  கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா நிறைவேற்றுமா  என்று கேட்கிறார். இது அவரது அறியாமையைக் காட்டுகிறது. காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு காலங்களில் வரும் உபரி நீரை வறண்டு கிடக்கும் தென் மாவட்டங்களுக்குத் திருப்பும் வகையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அண்மையில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின்படி, முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளைக் கால்வாயில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில், தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிமீ தொலைவுக்கு வைகை ஆறு வரை கால்வாய் வெட்டப்படும். இரண்டாம் கட்டத்தில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தத 220 ஏரிகள், 23,245 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 

மூன்றாம் கட்டத்தில், வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிமீ தொலைவுக்கு கால்வாய் வெட்டப்படும். இதில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 492 ஏரிகளும், 44,547 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

மொத்தத்தில் காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கின்போது கடலில் கலக்கும் சுமார் விநாடிக்கு 6,300 கன அடி தண்ணீர் வறண்ட பகுதிகளுக்கு பாசனம், குடிநீர் வசதிக்காக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும். திட்ட மதிப்பு மொத்தம் 14,400 கோடியாகும் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 

இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: வெள்ளக் காலங்களில் காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

 விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத் திட்டம் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டமாகும். காவிரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வந்து விவசாயத்தை செழிக்க செய்து வளமான மாவட்டமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடக்கி வைத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட முதற்கட்ட பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள  தமிழக முதலமைச்சருக்கு  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றார். 

முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டி வந்த டிராக்டரில் முதல்வரும் துணை முதல்வரும்  அமர்ந்தபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் அமைச்சர்  எஸ். வளர்மதி, வீட்டுவசதி வாரியத்தலைவர் பி,கே. வைரமுத்து, முன்னாள் எம்எல்ஏ- வீ.ஆர். கார்த்திக்தொண்டமான், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளின் ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மத்திய மண்டல திருச்சி சரக காவல்துறை தலைவர் எச்.எம்.ஜெயராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல்.பாலாஜி சரவணன் மற்றும் போலீஸார் செய்திருந்தனர். 

 

                                                   


Top