logo
சாலை பாதுகாப்பு மாதம்: பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்றம்

சாலை பாதுகாப்பு மாதம்: பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்றம்

18/Feb/2021 10:51:24

புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டையில் 32-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு  புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழகம், புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பட்டி மன்றத்தை நடத்தினர்.

கல்லூரி நிறுவனத் தலைவர் குரு .தனசேகரன் தலைமையில்   சாலை விபத்துக்கு பெரிதும் காரணம்... கவனச்சிதறலே.. நேர நிர்வாகமே.. என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இரா. பொன்முடி பட்டிமன்ற நடுவராக கலந்து கொண்டார்.

 நிகழ்ச்சியில், சாலை விபத்துக்கு பெரிதும் காரணம் கவனச்சிதறலே என்ற தலைப்பில் ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் என்.கலைச்செல்வி, ஏ.விருத்திகா, எம்.யாஸ்மின் ஆகியோரும் நேர நிர்வாகமே என்ற தலைப்பில் ஆர்.ரம்யாதேவி, சி.பிரியங்கா, எஸ்.ஆர்.ஆனந்த லட்சுமி ஆகியோர் வழக்காடினர். இதில் நேரநிர்வாகமே என்று பட்டிமன்ற நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் வாழ்த்திப் பேசினார். துணைத்தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு  வரவேற்றார்.  இதையொட்டி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் கவிஞர் மு .பா, ஜ.ராஜாமுஹம்மது, வாராப்பூர் ஊராட்சித் தலைவர் பசுமை தேசம் சதீஷ்குமார், அரசு போக்குவரத்துக் கழக  தொழில்நுட்ப உதவி மேலாளர் எஸ்.தங்கப்பாண்டியன், மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

 மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் ராஜா குழுவினர் சார்பாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன நிகழ்ச்சியினை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க நிர்வாகி என்.லட்சுமி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பட்டிமன்ற குழுவினருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக புத்தகம் மற்றும் நினைவு பரிசுகளும், கல்லூரிக்கு நினைவுக் கேடயத்தையும் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இரா. பொன்முடி வழங்கினார்.  நிறைவாக துணை மேலாளர் எம்.சுப்பு நன்றி கூறினார்.

Top