logo
மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த  வட மாநில இளைஞருக்கு 3 மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வட மாநில இளைஞருக்கு 3 மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

18/Feb/2021 08:16:59

புதுக்கோட்டை, பிப்:  மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக குஜராத் மாநிலத்தை சேர்ந்த டேனிஸ் பட்டேல் என்பவருக்கு மூன்று  மரணதண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. 

குஜராத் மாநிலம் அம்பிகா பார்க் பகுதியைச் சேர்ந்தவர் டேனிஸ்பட்டேல்(34). இவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூர் பகுதியில் உள்ள கிரஷரில் வேலை பார்த்து வந்தார். அப்போது கிரஷருக்கு பக்கத்து கிராமத்தில் மனவளர்ச்சி குன்றிய வாய் பேச முடியாத சிறுவன் புகழேந்தி சாலையில் சென்று வருவதைப் பார்த்துள்ளார். 

.இதனை பார்த்து டேனிஷ் பட்டேல் கடந்த 2019-ஆம் ஆண்டு சாலையில் நின்று கொண்டி ருந்த மனவளர்ச்சி குன்றிய புகழேந்தி என்ற சிறுவனை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டு பகுதிக்கு கூட்டிச் சென்று அவர் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட கீரனூர் போலீசார் டேனிஷ் பட்டேலை  கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 18 நாட்கள் சிகிச்சையில் இருந்த புகழேந்தி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சத்யா, குற்றவாளி டேனிஸ் பட்டேலுக்கு மூன்று மரண தண்டனை ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு மொத்தம்  9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Top