logo
சட்டப்பேரவை தேர்தலில் . திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் : காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்

சட்டப்பேரவை தேர்தலில் . திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் : காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்

16/Feb/2021 10:19:07

புதுக்கோட்டை, பிப்: சட்டப்பேரவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்  சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம்..


புதுக்கோட்டையில் நடைபெற்ற  மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி ப. சிதம்பரம்  பேசியதாவது:   மத்திய அரசு புதிய செஸ் வரி விதித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. செஸ் வரி விதிப்பதால் மாநிலங்களுக்கு நிதி கிடைக்காது. தங்கம், பெட்ரோல்-டீசல், ஆப்பிள் என அனைத்திற்கும் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி மூலம் எவ்வளவு நிதி கிடைக்கும் என்றும் கூறவில்லை.


 எனவே எல்லா வகையிலும் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக  மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. கல்விக் கடன் வாங்கியவர்கள் வேலை இல்லாததால் கடனை கட்ட முடியவில்லை. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கொடுத்த கடனை வசூல் செய்யும் வேலை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சரியானது அல்ல. 


அதிமுக சசிகலாவிடம் சென்று சேர்ந்துவிடும் தேர்தலுக்கு முன்போ தேர்தலுக்குப் பிறகோ முழுமையாக அதிமுக சசிகலாவிடம் சென்று சேர்ந்துவிடும். சசிகலா வருகையால் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் வராது.  திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.  தொகுதி பங்கீடு  விவகாரத்தில் திமுக கூட்டணியில் எந்தவித குளறுபடியும் இல்லை. புதியதாக தற்போது கூட்டணி அமைக்கவில்லை. 

பலமுறை கூட்டணி அமைத்த கட்சிகள்தான் திமுகவும் காங்கிரசும் . அதனால் தொகுதிப் பங்கீட்டில் எந்தவித பிரச்னையும் இல்லை என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.

 இதில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தலைவராக நியமிக்கப்பட்ட ராமசுப்புராம், மாநில பொதுச்செயலர் ஏ. சந்திரசேகரன், வடக்கு மாவட்டத்தலைவர் வி. முருகேசன், முன்னாள் எம்எல்ஏ- புஷ்பராஜ் நகரத்தலைவர்  ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு, அரிமளம் முகமது இப்ராஹிம், திருமயம் அக்பர்அலி, புதுக்கோட்டை தமிழ்செல்வன் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.


முன்னதாக, புதுக்கோட்டையிலுள்ள தீரர் சத்தியமூர்த்தி உருவச்சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Top