logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம்:  பிப்.21-இல் விராலிமலையில் முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம்: பிப்.21-இல் விராலிமலையில் முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்

16/Feb/2021 09:46:12

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவுத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு  தமிழக முதல்வர் பழனிசாமி  வருகிற 21.02.2021 அன்று விராலிமலையில்  அடிக்கல் நாட்ட உள்ளதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 காவிரி வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்துக்கு  பிப-21-இல், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவுத்திட்டமான காவிரி(கட்டளை)- வைகை-  குண்டாறு வெள்ள கால்வாய் இணைப்புத் திட்டப்பணிகளை  தமிழக முதல்வர்  பழனிசாமி   வருகின்ற 21.2.2021 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் நடைபெறும் விழாவில் அடிக்கல்  நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். 

சுமார் 14 ஆயிரம் கோடி மதிப்பில் கருர் மாவட்டம், மாயனூரில்  காவிரி(கட்டளை)யில் தொடங்கும் இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு  முதல் கட்டப்பணிகள் தொடங்குகின்றன.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 52 கிமீ நீளத்துக்கு இக்கால்வாய் அமைகிறது. இதன் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 17,066 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் தற்போதைய    வறட்சி நிலை  மாறி  மஞ்சள், கரும்பு, நெல் விளையக் கூடிய செழுமையான பூமியாக மாறும். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த பயன்பெறுவார்கள்.

  இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சார்பில்  நன்றியை  தெரிவித்துக் கொள்வதுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்த  முதல்வருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தை  ஆய்வு செய்யும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி. எல். பாலாஜிசரவணன், மாவட்ட வருவாய் அலுவலர்  பெ.வெ. சரவணன், நீர்வள ஆதாரத் துறை உதவி கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைச்செல்வம் உள்பட  தொடர்புடைய அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.


 


Top