logo
ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் - சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கு  ரூ.18 லட்சம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் - சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.18 லட்சம் அபராதம்

19/Nov/2020 06:13:32

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது. இந்த வைரஸுக்கு  இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  

எனவே, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வந்தது.

 ஆனாலும் வெளியே வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வருவதை காணமுடிந்தது. இதையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ. 200 அபராதம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்பு பவர்களுக்கு ரூ.500 அபராதமும், கடைகள், பெரிய நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்காவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆங்காங்கே முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

நாளொன்றுக்கு மாவட்டம் முழுவதும் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதேப் போல் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள், ஜவுளி கடைகள் நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.18 லட்சத்து 77 ஆயிரத்து 200  அபராதமாக விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


Top