logo
காற்றாலை மூலம் பறவைகள் உயிரிழப்பது குறித்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள்  பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

காற்றாலை மூலம் பறவைகள் உயிரிழப்பது குறித்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

09/Feb/2021 05:46:29

காற்றாலை மூலம் பறவைகள் உயிரிழப்பது குறித்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் காலநிலைத்துறை செயலர், தமிழ்நாடு ஆற்றல் துறை செயலர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த சௌந்தர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில்தான் அதிகளவு காற்றாலை உள்ளன. காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறுவதில் இந்தியா நான்காவது இடத்திலும் தமிழ்நாடு முதலிடத்திலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காற்றாலைகளில் மோதியும் உயர் மின் கம்பிகளில் மின்சாரம் தாக்கியும் பல பறவைகள் உயிரிழக்கின்றன. இதனால் 0.5% பறவைகள் உயிரிழப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதில் அரிய வகை பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டுக்கு பறவைகள் அதிகளவில் வலசை வந்து செல்கின்றன. இவற்றில் காற்றாலை இறகுகளில் மோதியும் மின்னழுத்த கம்பிகளில் அமரும்போது மின்சாரம் தாக்கியும் பல பறவைகள் இறந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி காற்றாலைகளுக்கு ஆரஞ்சு கலர் அடிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் காற்றாலைகள் சுற்றும்போது ஏற்படுகின்ற சத்தம் பறவைகளை துன்புறுத்தும் வகையில் இருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளனர்.

இதேபோல் 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பானையின் படி உயர் மின்னழுத்த கம்பிகளில் செல்லும் மின்சாரமானது சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். ஆனால், இது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்து ஆன்லைன் வழியாகப் பல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பறவைகள் மோதி இறக்காத வகையில் புதிய வழிமுறைகளைப் பின்பற்றவும் அதேபோல் உயர் மின்னழுத்த கம்பிகளில் பறவைகள் மின்சாரம் தாக்கி இறக்காத வண்ணம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் வழிமுறைகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய சுற்றுசூழல் காலநிலைத்துறை செயலர், தமிழ்நாடு ஆற்றல்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8.3.2021-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.     ‌‌ 


Top