21/Dec/2020 04:50:32
ஈரோடு, டிச:மின்வாரிய பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் மின்வாரியத்தினர் இன்று முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 12 ஆயிரம் காலிப்பணியிடங்களை நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மின்வாரியப்பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு மின்வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், மின்வாரிய பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ள அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உத்தரவை திரும்ப பெறக்கோரியும் மாநிலம் தழுவிய அளவில் மின்வாரிய ஊழியர்கள் இன்று மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
ஈரோட்டில் ஈவிஎன் சாலையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கிய காத்திருப்பு போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தொமுச, சிஐடியு, மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம், பொறியாளர் சங்கம், ஐஎன்டியுசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தொமுக திட்ட செயலாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது, மின்வாரிய பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் லைன்மேன், வயர்மேன், ஹெல்பர், பொறியாளர்கள் என முழுமையாக அனைத்து பணியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
தனியாரிடம் ஒப்படைத்துள்ளதற்கான அரசாணை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தை வேறுவழியில் தீவிரப்படுத்துவோம். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.