logo
 நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிய அம்மா மினி கிளினிக் உதவுகின்றன: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிய அம்மா மினி கிளினிக் உதவுகின்றன: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

08/Feb/2021 09:06:12

புதுக்கோட்டை, பிப்:  ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிந்து குணப்படுத்துவதில் அம்மா மினி கிளினிக் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே இராஜகிரியில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில், அம்மா மினி கிளினிக்கை   (8.2.2021) துவக்கி வைத்து அமைச்ர் சி.விஜயபாஸ்கா தொடக்கி வைத்து பேசியதாவது:

மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில்  பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அரசு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழகம் பிற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. 

அந்த வகையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் சாதாரண காய்ச்சல், தொற்றா நோய் போன்ற நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

 அதனடிப்படையில் தற்போது  இராஜகிரியில் திறந்து அம்மா மினி கிளினிக்கில்  ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர்  ஆகியோர்  இருப்பார்கள். 

கிளினிக் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும். சனிக்கிழமை விடுமுறை ஆகும். இங்கு சர்க்கரை அளவு, ஹெச்.பி அளவு, சிறுநீர் சர்க்கரை, சளி பரிசோதனை, சிறுநீர் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்தல், சிறுநீர் அல்புமின் அளவு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

 மேலும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, புற நோயாளிகள் மற்றும் சிறு நோயாளிகளுக்கான சிகிச்சை, முதியோருக்கான சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான பொதுவான சிகிச்சை போன்றவை வழங்கப்படும். இதேபோன்று சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, சிறு காயங்களுக்கான மருந்துகள், சத்து மாத்திரைகள், புற நோயாளிகளுக்கான அனைத்து மருந்துகளும் வழங்கப்படும்.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதில் அம்மா மினி கிளினிக் முக்கிய பங்கு வகிக்கிறது. இதேபோன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பல்வேறு உயர்தர மருத்துவப் பிரிவுகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மகளிர் நலனை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கான பரிசோதனை முகாம்  9.2.2021 அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பனம்பட்டி, திருவேங்கைவாசல், கோதண்டராமபுரம், பெருமாநாடு, புல்வயல் ஆகிய கிராமங்களில் நடைபெறுவதுடன், இதில் கர்ப்பிணி களுக்கான சிறப்பு பரிசோதனை, மார்பக புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் பரிசோதனை, ஹீமோகுளோபின், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, மகளிருக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும்  வழங்கப்பட உள்ளன. இதனை மகளிர் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.. 

 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.பழனியாண்டி, பொது சுகாதாரத் துணை இயக்குநர் பா. கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  

Top