logo
புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல்: கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல்: கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து மக்கள் சாலை மறியல்

05/Feb/2021 08:54:11

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரை கூலிப்படையை வைத்து கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஞானபிரகாசம்(55). இவரது மனைவி அருள்சிறுமலர் தற்போது ஊராட்சித் தலைவராக உள்ளார். இந்நிலையில், அந்த ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய அம்பிகா லஞ்சம் பெற்றதை ஞானபிரகாசம் அண்மையில் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சில மர்மநபர்கள் ஞானபிரகாசத்தை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த ஞானபிரகாசம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இதைத்தொடர்ந்து, ஞானபிரகாசத்தை கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா கூலிப்படையை வைத்து தாக்கியதாகவும், அவரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி வடவாளம் பகுதி மக்கள் புதுகை-தஞ்சை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற செம்பட்டிவிடுதி போலீஸார், புதுக்கோட்டை வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அளித்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுகை-தஞ்சை நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Top