logo
ஈரோடு மாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் குறித்த கணக்கெடுக்க 450 குழுக்கள் அமைப்பு

ஈரோடு மாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் குறித்த கணக்கெடுக்க 450 குழுக்கள் அமைப்பு

17/May/2021 12:19:27

ஈரோடு, மே: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் குறித்த கணக்கெடுக்க 450 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் சி. கதிரவன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிப்பார்கள் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறியிருந்தார். இதில்  பாதிப்பு கண்டறியபட்டவர்களுக்கு அவர்கள்  தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் 450 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்,தன்னார்வலர்கள் உள்ளனர். 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர்  என்ற அடிப்படையில் இந்த பொறுப்பாளர்கள்  திங்கள்கிழமையிலிருந்து  ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில்  வீடு வீடாகச்  சென்று சளி காய்ச்சல் உள்ளதா என்று கேட்டறிந்தனர்.

இதில்  காய்ச்சல் சளி உள்ளவர்களின் விவரங்களை பதிவு செய்து வைக்கின்றனர். இதையடுத்து அந்த பொறுப்பாளர்கள்  உயர் அதிகாரி களுக்கு இது குறித்த தகவலை தெரிவிப்பார்கள். அவர்கள்  சம்பந்தப்பட்ட சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

சுகாதாரத் துறையினர் காய்ச்சல் சளி உள்ளவர்கள் வீட்டில் சென்று பரிசோதனை செய்வார்கள். இதில் கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். அப்படி இல்லாமல் சாதாரண சளி காய்ச்சல் இருந்தால் அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிப்பார்கள். இவ்வாறு வீடுகளுக்கு வரும் பொறுப்பாளருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தெரிவித்துள்ளார்

Top