logo
வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம்

வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம்

29/Jan/2021 10:54:51

ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

 சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே விளாமுண்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட உங்கனூரான்குட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மல்லியம்பட்டி செல்லும் சாலையின் அருகே உள்ள முட்புதரில் இருந்து 4  நபர்கள் சாக்கு மூட்டையுடன் செல்வதை கண்டு அவர்களை பிடித்து அவர்கள் கொண்டு வந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது அதில் ஆண் புள்ளிமானின் தலை, கால் மற்றும் இறைச்சி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கணக்கரசம் பாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, ரமேஷ் பழனிச்சாமி மற்றும் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பதும் இவர்கள் 4 பேரும் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள மல்லியம்பட்டி ரோடு அருகே உள்ள முட்புதர்களில் சுருக்கு கம்பிகள் வைத்து புள்ளி மானை வேட்டையாடி வனப்பகுதிக்குள் வைத்து துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் மூட்டை கட்டி எடுத்து வந்தது தெரியவந்தது.

 பின்னர் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மானை வேட்டையாடிய தலா நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் வீதம்  4 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவர்களை விடுதலை செய்தனர். 

                                                   


Top