logo
திருவண்ணாமலை மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை: விசாரணை நடத்தப்படும்

திருவண்ணாமலை மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை: விசாரணை நடத்தப்படும்

08/Dec/2020 09:18:52

திருவண்ணாமலை, டிச: தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 29-ந்தேதி 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த மகா தீபம் வருகிற 9-ஆம் தேதி வரை காட்சி அளிக்கும். மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று பார்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்டு உள்ள மகா தீபத்தை, சூது கவ்வும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி கார்த்திகை தீபம் மறுநாள் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுள்ளார். பின்னர் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் மலை உச்சிக்குச் சென்றார். அங்குத் தீபம் அருகில் நின்று கும்பிட்டவர் பிறகு சிவன் பாதம் பதிந்த இடத்தில் வழிபட்டார்.

அவர் மகா தீபத்தை அருகில் நின்று தரிசிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அதில் சஞ்சிதா ஷெட்டி, திருவண்ணாமலை மலையேறியது உண்மையிலேயே சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது. மலையின் உச்சிக்குச் சென்றடைய 1 மணி 40 நிமிடம் ஆனது. கீழே இறங்கி வர 2 மணி 30 நிமிடம் ஆனது. இதில் ஆங்காங்கு இளைப்பாறிய நேரமும் அடங்கும். தீப தரிசனம் பெற உதவியவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் அவர் மகா தீபம் தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்டபோது, மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த வழிகாட்டி (கைடு) மூலமாக தான் அவர் மலைக்கு சென்று இருப்பார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது பற்றி சஞ்சிதா ஷெட்டி கூறுகையில், பாலாஜி பிறந்த தலமான கோவிலுக்குச் சென்றேன். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்தேன் என்றார். மேலும் அன்பையும் பாசிடிவிட்டியையும் பரப்புவோம் என ஹேஷ் டேக் பகிர்ந்திருந்தார். முன்னதாக அவர் வீட்டில் லட்சுமி துர்கா சிறப்பு பூஜை செய்து அதன் வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Top