logo
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

28/Jan/2021 04:32:14

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் (ஜன.27)திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.  நினைவிடம்  அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான நிதியை ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, கட்டுமானப்பணியை கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

அதன்படி 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், முதல்கட்டமாக ரூ. 57.8 கோடி  ஒதுக்கப்பட்டு ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பு வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

வ்வப்போது கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளையும் வழங்கிய முதல்வரும், துணை முதல்வரும், கட்டுமானப் பணிக்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு மொத்தம் ரூ.79.75 கோடிக்கு நிதியை அரசு ஒதுக்கியது. அதன் பிறகு கட்டுமானப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

இதன் பிறகு ஜெயலலிதா நினைவிட பணிகள் மிக வேகமாக நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் வடிவமைத்து கொடுத்த தொழில் நுட்பங்களுடன் துபாய் நாட்டின் கட்டிடக்கலை நிபுணர்களும் இணைந்து கட்டுமானப் பணிகளை மிக நேர்த்தியாக அமைத்து வந்தனர். பீனிக்ஸ் பறவை வடிவமைப்புக் கொண்ட இந்த நினைவிடம் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்று இருக்கின்றன. அத்துடன் டிஜிட்டல் முறையிலான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா நினைவிட பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. திறப்பு விழாவையொட்டி ஜெயலலிதா நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். நினைவிட வளாகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.புதன்கிழமை காலை 11 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

 இதற்காக நுழைவிட வாயிலில் மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10.55 மணியளவில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். முதலில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று நினைவிடத்தை திறந்து வைத்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர்  கே.எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்து முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் அதிகாலை முதலே வாகனங்களில் அணிவகுத்து வந்த ஆயிரக் கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தைக் காண  திரண்டு வந்திருந்தனர்.

இதனால், மெரீனா கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் மக்கள் கூட்டமாகவே  காணப்பட்டது. இதனால் கடற்கரை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Top