logo
தில்லியில் போராடும் விவசாயிகளுக்காக சென்னிமலையில் தேசிய கொடிகளுடன் விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி

தில்லியில் போராடும் விவசாயிகளுக்காக சென்னிமலையில் தேசிய கொடிகளுடன் விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி

26/Jan/2021 09:05:11

ஈரோடு, ஜன: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னிமலையில் விவசாயிகள் தேசிய கொடிகளுடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் குடியரசு நாளான  செவ்வாய்க்கிழமை விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தினர்.இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற கோரியும் வலியுறுத்தி சென்னிமலையில்  விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் கிராமப்புறங்கள் வழியாக ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். 

அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் சென்னிமலை-காங்கயம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே தேசிய கொடிகளுடன் விவசாயிகள் மற்றும் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். 

அப்போது அங்கு வந்த போலீசார் கிராமப்புறங்கள் வழியாக இருசக்கர வாகன ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்தனர்.

இதனால் விவசாயிகள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து  முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் (பொறுப்பு) சண்முகசுந்தரம், சண்முகம் ஆகியோர் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 


இதனையடுத்து தேசிய கொடிகளுடன் இருசக்கர வாகனங்களில் விவசாயிகள் பஸ் நிலையம் வழியாக குமரன் சதுக்கம் சென்று அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் பேருந்து  நிலையத்தில் திரண்டு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், பிரபு மற்றும் பொன்னுசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), ரவி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஜிதேந்திரன் (காங்கிரஸ்), கி.வே.பொன்னையன்  (தற்சார்பு விவசாயிகள் சங்கம்) உட்பட பலர் கலந்து கொண்டு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

Top