logo
 அரசு மகளிர் பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க  மத்திய அரசு ரூ. 500 கோடி ஒதுக்கீடு :அமைச்சர் செங்கோட்டையன்

அரசு மகளிர் பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க மத்திய அரசு ரூ. 500 கோடி ஒதுக்கீடு :அமைச்சர் செங்கோட்டையன்

21/Jan/2021 10:44:26

ஈரோடு, ஜன: அரசு மகளிர் பள்ளிகளில் கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிப்பதற்காக  மத்திய அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் மேலும்  அவர் கூறியதாவது: இந்த அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. முதல் முதலில் ரேங் சிஸ்டம் முறையை இந்த அரசுதான் ரத்து செய்தது. அதைப்போல் தேர்வு முடிவுகளை மாணவர்க ளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வெளியிட்டது  இந்த அரசு தான்.புதிய பாடத் திட்டம் கொண்டு வந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி முதல்வர் சரித்திர சாதனை படைத்துள்ளார்.

 இதன் மூலம், 411 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. 147 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் உள்ளனர். தேவைப்படும் இடங்களில் கூடுதலாக ஆசிரியர்கள்  நியமிக்கப்படுவார்கள்.

 ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப நியமிக்கப்படுவார்கள்.அவர்களுக்கு பணி என்பது தமிழகத்தில் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளதோ அதற்கு தகுந்து போல் தான் நிரப்ப முடியும் .கூடுதலாக நிரப்ப வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பு வந்த பிறகுதான் கூடுதலாக நிரப்ப முடியும். அதற்கு மேலும் இருந்தால் தேர்வு வைத்து தான் நிரப்ப முடியும்.

பள்ளி கல்வித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் அந்தப்பணியிடங்கள் நிரப்பப்படும்.ஈரோடு மாவட்டம் பன்னாரி மாரியம்மன் கோயிலில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான  ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் படிக்கும் அரசு பள்ளியில் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிப்பு செய்ய மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ. 500 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.


Top