logo
பொங்கல் பண்டிகைக்காக… புதுக்கோட்டையில்  கரும்பு - மஞ்சள் கொத்து விற்பனை தீவிரம்..

பொங்கல் பண்டிகைக்காக… புதுக்கோட்டையில் கரும்பு - மஞ்சள் கொத்து விற்பனை தீவிரம்..

13/Jan/2021 11:54:39

புதுக்கோட்டை, ஜன: ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால்  வேளாண் சாகுபடியைத்தான் செய்ய முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு,  கொடியில் விளையும்  காய்கறிகள். குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். 

செந்நெல்லில் அரைத்த பச்சரிசியை நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிறிஸ்த வர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.

தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிர்க்கும் வழக்கமும் உள்ளது.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் தைப் பொங்கலை பாரம்பரிய முறையில் கொண்டாடுவதற்காக புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் சந்நிதி அருகே புதன்கிழமை  விற்பனைக்கு குவிந்துள்ள பொங்கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் கொத்துகள், திலகர்திடலில் குவிந்திருந்த கரும்பு  ஆகிய பொருள்ளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.


Top