logo
கொரோனா தடுப்பூசி போடும் பணி: மதுரையில் 16-ஆம் தேதி  முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கொரோனா தடுப்பூசி போடும் பணி: மதுரையில் 16-ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

11/Jan/2021 08:13:04

சென்னை, ஜன: தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், இது தொடர்பாக நாளை(ஜன.12) அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டு, தடுப்பூசி போடுவதற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தை பொருத்தவரை,முதல்கட்டமாக 500 மையங்களில் சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. இதற்காக ராணுவப் படையின் விமானங்கள் மூலமாக தடுப்பூசி மருந்துகள் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை கூறுகையில், 47,000 மையங்கள் தயார் நிலையில் இருந்தாலும் முதலில் 500 மையங்களில்தான் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

மேலும் தடுப்பூசி வழங்கப்படும் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ள காவல்துறை, தீயணைப்புப் படை உள்ளிட்டோரின் தகவல்களை அந்தந்தத் துறை சார்பில் செயலியில் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிக்கல்களைக் களைய தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக மத்திய சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவப்படையின் விமானங்கள் மூலமாக சென்னை கொண்டு வரப்பட உள்ள கோவிட் தடுப்பூசி மருந்துகள் பெரியமேட்டில் உள்ளமத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து மாநிலத்தின் 51 கிடங்குகளுக்குக் கொண்டு செல்லத் தேவையான வாகனங்களும், குளிர்சாதனப் பெட்டிகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கையிருப்பில் இருந்த 17 லட்சம் தடுப்பூசி சிரிஞ்சுகள் மற்றும் மத்திய அரசு வழங்கிய 33 லட்சம் தடுப்பூசி சிரிஞ்சுகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுவிட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


Top