logo
கீழ்பவானி வாய்க்கால் ரூ.940 கோடியில்  சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

கீழ்பவானி வாய்க்கால் ரூ.940 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

07/Jan/2021 10:55:59

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:விபத்து இல்லாமல் வாகனங்கள் விரைந்து செல்லும் வகையில் சித்தோடு முதல் கோபி, சித்தோடு முதல் ஈரோடு வரை நான்குவழிச்சாலை அமைக்கப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். 

சித்தோடு பகுதியில் மட்டும் 3800 வீடு கட்டித் தருகிறோம். கிராமப்புற பகுதிகளில் பசுமைவீடு கட்டித் தருகிறோம். பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் கட்டுமானச் செலவு அதிகரித்ததால், இரண்டரை லட்சம் வீடுகளுக்கு ரூ 7 0 ஆயிரம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மின்வெட்டு இல்லாமல் மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்குவதால், தொழிற்சாலைகள் அதிக அளவில் தொடங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த தொழில் முதலீட்டு மாநாடு மூலம் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டது.

இதன் மூலம் 304 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு,  10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் கரோனா காலத்தில் கூட 60 ஆயிரம் கோடி முதலீடு பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான்.  இதன்மூலம் ஒன்றே கால் லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்

எங்களது அரசு நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது. மழைக்காலத்தில் வரும் உபரி நீரைச் சேமிக்கும் வகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலிங்கராயன்பாளைய வரை 7 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. கீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவைத் தடுக்க, ரூ 940  கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.உலகத்தரத்திலான கல்வி தமிழக மாணவர்களுக்கு வழங்கப் படுகிறது.  ஒரு மடிக்கணினி 12 ஆயிரம் என்ற விலையில், 55 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மானிய விலையில் சொட்டுநீர் பாசனம், வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது.  ஏழை மக்கள் மருத்துவக் காப்பீடு திட்டத்தொகைய ரூ 5 லட்சமாக உயர்த்தியுள்ளோம். முதியோர் உதவித்தொகை 5 லட்சம் பேருக்கு கொடுக்கப்படும் என அறிவித்து, 90 சதவீதம் பேருக்கு கொடுத்துள்ளோம்.

ஸ்டாலின் தனது வாரிசுதான் வர வேண்டும் என நினைக்கிறார். குடும்ப ஆட்சி தேவையா? நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் பதவிக்கு வரலாம். அது அதிமுகவில்தான் நடக்கும்.  திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வரும். ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து வந்து விடும். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தையே பட்டா போட்டு விடுவார்கள். தீய சக்தி திமுகவை புறக்கணிப்போம் என்றார் முதல்வர் பழனிசாமி.

Top