logo
திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதில்  இம்மியளவும் கூட உண்மை இல்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதில் இம்மியளவும் கூட உண்மை இல்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு

07/Jan/2021 09:44:51

ஈரோடு, ஜன:  ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். புதன்கிழமை பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து  வியாழக்கிழமை  மாநகர் மாவட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு வந்தார். 

 கருங்கல்பாளையம் காவிரி கரையில் மாநகர மாவட்டம் அதிமுக சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பார்த்து கையசைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அங்கு இருந்த  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்னர் காலை 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பிரசார  பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் பேசியதாவது:

ஜெயலலிதா மறைவுக்கு பின் நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.  எனக்கு பின்பும் நூற்றாண்டுகாலம் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என சட்டமன்றத்தில் ஜெயலலிதா சூளுரைத்தார்கள்.  அவர் மறைந்தாலும், அவர் ஆற்றிய பணி சேவை இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் நாட்டுக்காக, பிறந்து சேவை  செய்தனர். அவர்கள் வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் பொய் அறிக்கை வெளியிட்டு, வேண்டு மென்றே அரசின் மீது பழி சொல்லியும், அமைச்சர் மீது குறை சொல்லியும் அவதூறு பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.  இந்த தேர்தல் மூலம் அவரை நிராகரித்து அதிமுக வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய்.  இம்மியளவும் கூட உண்மை இல்லை. அவர்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்த 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதை மறைப்பதற்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு, ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் போது பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்காக, இன்றைக்கு திட்டமிட்டு அரசியல் சூழ்ச்சி செய்து, அரசியல் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். அதிமுக ஆலமரம் போன்றது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொடுக்கும் கட்சி அதிமுக. 

ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஈரோடு கிழக்குத்தொகுதியில் 6 அம்மா மினி கிளினிக் தொடங்கியுள்ளோம்.  ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெற தொடங்கப்பட்ட மினி கிளினிக் திட்டத்தை நாடே போற்றுகிறது.

ஆனால் ஸ்டாலின் மட்டும் குறை கண்டுபிடிக்கிறார்.  இதில் என்ன குறை,  சந்தேகம் அவருக்கு வந்தது எனத் தெரியவில்லை.  எதிர்கட்சித்தலைவர்எதைத்தொட்டாலும் சந்தேகப் பேர்வழியாக இருக்கிறார். தமிழகத்தில்  2000 மினி கிளினிக் தொடங்கி சாதனை படைத்த அரசு அதிமுக அரசு. 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 41 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் கடந்த ஆண்டு 6 இடங்கள் மட்டுமே மருத்துவக் கல்வி கிடைத்தது.நானும் கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்தவன் என்ற முறையில், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க  7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கினேன். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அடுத்த  ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 130 பேர் சேருவார்கள். இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 443 பேர் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான கல்விகட்டணத்தை அரசே ஏற்கிறது. 

 ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 10ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்க,  ஆண்டுதோறும் ரூ 1500 கோடி கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம்.  தாழ்த்தப்பட்ட மக்களும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த உதவித்தொகையை வழங்குகிறோம்

 ஈரோடு மாநகரத்தில் ஏழை மக்கள் குடியிருக்க 1850 வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். ரூ 62 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் பணி நடக்கிறது. ரூ. 70 கோடியில் ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரும் பணி நடக்கிறது. ரூ 2 50 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் நடைபெறுகிறது.  உயர்தர சிகிச்சை ரூ.62  கோடியில் பணி நடக்கிறது. ஆட்சியர் ர் அலுவலாகம் ரூ. 70 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டி புதை சாக்கடைத் திட்டம் ரூ. 250 கோடியில் நடந்து முடிந்துள்ளது. இத்துடன் ரூ 45 கோடியில் இன்னொரு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஈரோடு நகரில் தடையில்லா மின்சாரம் வழங்க, எல்லா எல்லா இடங்களிலும் பூமிக்கு அடியில் மின்சார கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு பள்ளிபாளையத்தில் காவிரியின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.  பெரும்பள்ளம் ஓடை அழகுபடுத்த ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 52 கோடியில் வணிக வளாகம் அமைக்கும் பணி நடக்கிறது. ஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக, ரூ. 485 கோடியில் ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகள் 98 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் ரூ. 90 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் முடிவுற்றதும் நானே திறந்து வைப்பேன். 

திமுக ஆட்சியில் இவ்வளவு பணிகள் நடந்ததா? 

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஈரோடு அரசு மருத்துவமனை பாலம் கட்டப்பட்டுள்ளது.  காலிங்கராயன் இல்லம் முதல் திண்டல் வரை உயர்மட்டப்பாலம் அமைக்கப்படவுள்ளது. மேலும், ஈரோடு புறவழிச்சாலை, வட்டச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு - பெருந்துறை சாலைப் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எங்களது சாதனைகளை, திமுக ஆட்சியோடு ஒப்பிட்டுப் பாருங்கள். 2011 முதல் 2020 வரையிலான அதிமுக ஆட்சியில், ஈரோட்டில் வாக்காளர்களின் பெரும்பாலான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக அரசைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. யார் தவறு செய்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக எங்கள் அரசு விளங்குகிறது. 

திமுக ஆட்சியில் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களைக்  காப்பாற்ற முயற்சிப்பார்கள். சட்டத்திற்கு எதிராக நடப்பார்கள்.  அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. 

சிறுபான்மை மக்களாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த அரசு பாதுகாப்பு வழக்கும். எந்த மாற்றமும் கிடையாது. ஜாதிச்சண்டை, மதச்சண்டை கிடையாது. அமைதிப் பூங்காவாக தமிழகம் விளங்குறது.

மற்ற மாநிலங்க ளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். மற்ற மதத்தினரோடு அண்ணன் - தம்பிகளாக பழகி வருகின்றனர். 

கரோனா பாதிப்பின்போது எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகளால், கரோனா பாதிப்பு குறைந்து வருகிறாது. கரோனா பாதிப்பு காலத்தில், 8 மாதம் விலையில்லா அரிசி 40 கிலோ, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, ரூ 1000 ரொக்கம் கொடுத்தது தமிழக அரசு. 

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது, தூணாக இருந்து மக்களைக் காக்கு அரசாக உள்ளோம்.தைப் பொங்கலை  சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ரூ 2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

   ஏழை மக்களுக்காக போடப்படும் திட்டங்கள் இவை.  தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளோருக்கு ரூ 80 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளொம். திமுக ஆட்சியில் வெறும் ரூ.8ஆயிரம் கோடிதான் கொடுத்தார்கள். இதன்மூலம் அவர்கள் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. 

இதையெல்லாம் மறைத்து திட்டமிட்டு ஸ்டாலின் அவதூறு பேசுகிறார். எதையும் சிந்தித்து பேசக்கூடிய அளவுக்கு ஸ்டாலின் இல்லை.

பல்வேறு துறைகளில் விருது பெற்றுள்ளோம்.  உள்ளாட்சித்துறையில்  நூற்றுக்கு மேற்பட்ட விருது, நீர் மேலாண்மை தேசியவிருது, கல்வியில் தேசிய விருது என பல விருதுகள் பெற்றுள்ளோம். தேசிய விருதுகள் பெறுவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. திமுக ஆட்சியில் ஒரு விருது கூட வாங்கவில்லை. தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. 

சாயப்பட்டரைக் கழிவுநீரைச் சுத்தப்படுத்த 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி வழங்கியவுடன், கழிவுநீர் சுத்திகரித்து வெளியிடப்படும். நடந்தாய் வழி காவிரி திட்டத்தில் மேட்டூர் முதல் காவிரி கடலில் சேரும் வரை எங்கு அசுத்த நீர் கலக்கிறதோ, அங்கேல்லாம் சுத்திகரித்து நீரை ஆற்றில் விடவுள்ளோம். பிரதமரைச் சந்தித்தபோது, இந்த திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோ. நாடாளுமன்றத்தில் குடியரசு தின உரையின்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது தமிழகத்தில் அதிமுக ஆட்சி வருவதற்கு முன்பு நூற்றுக்கு 32 பேர் உயர்கல்வி படித்த நிலை மாறி, இன்று நூற்றுக்கு 49 பேர் உயர்கல்வி படிக்கின்றனர். இந்தியாவில் உயர்கல்வியில் முதல்மாநிலம் விருது பெற்றுளோம்.  

இதெல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியுமா? அவர் பேசுவது அனைத்தும் பொய். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் ஸ்டாலினுக்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும். மக்களுக்காக சேவை செய்யும் இயக்கமாக,  மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து தீய சக்தி திமுகவை ஒழிப்போம்.

விழாவில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர்                                  கே .சி.பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீசன், முருக சேகர், தங்கமுத்து, ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், , ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம் மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top