05/Jan/2021 12:41:27
ஈரோடு, ஜன: ஈரோடு பவானி ரோடு பாவேந்தர் நகரை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன்(28). கிளப்பில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுவாதி(27) என்பவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. சுவாதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனை விட்டு பிரிந்து அம்மா தமிழரசியின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி இரவு மணிகண்டன் அன்னை சத்யா நகருக்கு வந்து மனைவி சுவாதியை சமாதானம் செய்து அழைத்து செல்ல வந்தார். அப்போது, மாமியார் தமிழரசிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மணிகண்டன் தகாத வார்த்தையால் பேசி, தமிழரசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மணிகண்டன் தாக்கியதில் காயம் பட்ட தமிழரசி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் தமிழரசி அளித்த புகாரின்பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மணிகண்டனை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்