logo
சட்டமன்ற தேர்தல் குறித்து கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை

சட்டமன்ற தேர்தல் குறித்து கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை

04/Jan/2021 03:38:10

ஈரோடு, ஜன: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். திமுக சார்பில் மு .க . ஸ்டாலின் மாவட்ட வாரியாக மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.

 

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு  வியூகங்களை அமைத்து வருகின்றன. அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் யூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி ஈரோடு வில்லரசம்பெட்டியில் கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஜி. கே. வாசன் தலைமையில் நடந்தது.

ஈரோடு, திருப்பூர், கோவை ,நீலகிரி, நாமக்கல், சேலம்  மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  கூட்டம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் உடன் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். சமூக இடைவெளியை  கடைப்பிடித்து இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். டி .சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞரணி தலைவர் யுவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top