logo
கோவையில், திமுக  நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம்  கேள்வி கேட்ட பெண்ணால் பரபரப்பு

கோவையில், திமுக நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணால் பரபரப்பு

02/Jan/2021 09:46:00

கோவை: கோவை, தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார்.

அப்போது எழுந்த, திமுக தொப்பி அணிந்த பெண் ஒருவர், திமுக கட்சி எதற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. திமுக வினர், ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி ஆள் என தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த பெண், திமுக எதையும் செய்யவில்லை. கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன் என முழக்கமிட்டபடி  வெளியேறினார். வெளியில் காத்திருந்த  திமுகவினர், அந்த பெண்ணையும், போலீசாரையும் தாக்கினர். இதில் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளில் திமுகவினர் கடுமையாக திட்டினர்.

இதன் பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக கட்டுப்பாடு உள்ள இயக்கம். அந்த பெண்ணை கண்டுபிடித்து எந்த பிரச்னையும் இல்லாமல் அனுப்பி வைத்தும். வேலுமணி அவர்களே, இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். இது போன்று நாங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல முதல்வரே கூட்டம் நடத்த முடியாது. இது தான் மரியாதை.

உங்களுக்கு தைரியம் இல்லை. திமுக தொப்பியை மாட்டி கொண்டு, தைரியம் இருந்தால், அதிமுக என கூறி அமர்ந்திருக்க வேண்டும்.இந்த கூட்டத்தை தடுக்க வேலுமணி முயற்சி செய்வது முன்னதாகவே எனக்கு தெரியும். ஒரு கூட்டத்தை தடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், எந்த கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம் என்றார் ஸ்டாலின்.



இதனிடையே, ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்ணின் பெயர் பூங்கொடி என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் பாதுகாப்புடன்  காவல் நிலையத்துக்கு  அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, தகவலறிந்த அதிமுகவினர், தொண்டாமுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். அதிமுகவினரை கண்டித்து திமுகவினரும் தொண்டாமுத்தூரில் மற்றொரு இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Top