logo
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

29/Dec/2020 09:47:21

ஈரோடு டிச:  ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன தலைமையில் காணொலி காட்சி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் மற்றும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் என 15 இடங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை  நடைபெற்றது. 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  சி.கதிரவன் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:  ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 717.0 மிமீஆகும். 28.12.2020 முடிய 776.55 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 93.83 அடியாகவும், 24.167 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நவம்பர்-2020-ஆம் மாதம் முடிய 84,559 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் விதைகள 342 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 27 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 26 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 115 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ரசாயன உரங்களான யூரியா 31,640 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 9,120 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 14,140 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 24,260 மெட்ரிக் டன்னும் மற்றும் கலப்பு உரங்கள் 4,165 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.127.85 இலட்சம் நிதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.68.22 இலட்சம் இலக்கும், நுண்ணீர் பாசன திட்டத்தில் ரூ.30 கோடி நிதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.29.98 கோடி இலக்கும் எய்தப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலைத் துறையின் மூலம் நுண்ணீர்பாசன திட்டத்தில் ரூ.58.50 கோடி நிதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.28.43 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது. 

தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காலிங்கராயன் மற்றும் மேட்டூர் வலது கரை வாய்க்கால் ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைக்கு தயாராக உள்ள பகுதிகளில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் கீழ்பவானி ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சி பருவத்தில் உள்ளதால் பல நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேளாண்மைத்துறை களப்பணியாளர்கள் வயல்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிப்பு ஏதேனும் இருந்தால் பூச்சிநோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


Top