logo
கோபிச்செட்டிபாளையத்தில் ரூ.2.20 கோடியில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம்: அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல்

கோபிச்செட்டிபாளையத்தில் ரூ.2.20 கோடியில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம்: அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல்

28/Dec/2020 05:12:41

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா அவர்கள் தலைமையில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன்  ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்டும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கோபி  ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீடடில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையமானது மூன்று தளங்களை கொண்டது. தரைதளமானது 3978.77 சதுர அடியிலும், முதல் தளம் 3186.12 சதுர அடியிலும், இரண்டாம் தளம் 2227.70 சதுர அடியிலும் அமையவுள்ளது.

 தரைதளத்தில் முற்றிலும் வேளாண் தோட்டக்கலை மற்றும் விதை சான்றுகள் சேமிப்பு வசதிகளுடனும், முதல் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, விற்பனைத்துறை, விதை சான்று மற்றும் வேளாண்பொறியியல் துறைக்கான அனைத்து வசதிகளுடனும், இரண்டாம் தளம் கோபி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கூட்ட அரங்கை உள்ளடக்கியும் அமையவுள்ளது.

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடமானது கோபி வட்ட அனைத்து வேளாண் அலுவலர்களையும், கோபி வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் நேரடியாக அணுகி அரசு திட்டங்களை பெற்று பயன்பெறும் வகையில் அமைக்கப்படுகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்..

இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி,  கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் விஸ்வநாதன், வேளாண்துறை துணை இயக்குநர்கள் அ.நே.ஆசைத்தம்பி, முருகேசன், உதவி இயக்குநர் (கோபி) ஜீவாதங்கவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top