logo
மினி கிளினிக்குகளில் வேலை... பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்:  அரசு ஆரம்ப சுகாதார இயக்ககம்  எச்சரிக்கை

மினி கிளினிக்குகளில் வேலை... பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: அரசு ஆரம்ப சுகாதார இயக்ககம் எச்சரிக்கை

26/Dec/2020 09:45:29

சென்னை:   தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2,000 மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் புற ஆதார முறையில் (Outsourcing) பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஒரு மாஃபியா கும்பல் இப்பணியிடங்களை நிரந்தர அரசு வேலை என்றும், அந்த பணியிடங்களுக்கு  ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. 

புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன செவிலியர்களே. எனவே, அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. 

இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தர பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் (R.No: 96109/UHC/S2/2020 Office of the DPH, Chennai    Dated: 15.12.2020) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் மார்ச் 2021வரை மட்டுமே என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே நிரந்தரமற்ற, நிச்சயதன்மையற்ற இந்த தனியார் ஒப்பந்த பணிக்கு செவிலியர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

மேலும், தற்போதைய சூழலில் கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மினி கிளினிக் திட்டத்தில்  பணிபுரிய விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

இந்த பணிக்கு யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால் கீழ்க்கண்ட முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை   இயக்ககம் தகவல் வெளியிட்டுள்ளது.(புகார்களுக்கான..தொடர்புக்கு. .044 - 24320802)- (EXTN - 203) 


Top