logo
கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஈரோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது

கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஈரோடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது

22/Dec/2020 11:02:06

ஈரோடு, டிச:  ஈரோடு, சுற்றுவட்டாரப் பகுதிக ளைச் சேர்ந்த இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ரூ.10 லட்சம்  வரை மோசடி செய்த  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ரொக்கப் பணம், போலி ஆவணங்கள், ஏடிஎம் கார்டு மற்றும் கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.

 மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, வில்லூர் உபரி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் இந்தியன் வங்கியில் தற்காலிகமாக முதன்மை தொழில் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றுவதாகக் கூறி வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினாராம்.

மேலும்  தன் மூலமாக கடன் வாங்கினால் 50 சதவிகிதம் தள்ளுபடியாகும் என்று கூறி ஈரோடு, சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், பவானி, குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வாழைக்காய் வியாபாரிகள், சிறு வியாபாரிகள்,தொழில் முனைவோரிடம் ரூ.10 லட்சம் வரை பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார்.

 மேலும்,தான் ஸ்டேட்பேங்க் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவராகவும் பணியாற்றுவதாகவும் கூறி அதற்கான பணத்தைப் பெற்றுத் தருவதாகவும் ஏமாற்றியுள்ளார். இதனிடையே கடன் வாங்கித் தருவதாகக் கூறி தங்களை மோசடி செய்தவர் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தலைமறைவாக உள்ள துரைராஜைத் தேடி வந்தனர்.

 இந்தநிலையில், அவர் திருப்பூரில் இருப்பதாக கிடைத்த  தகவலின் பேரில் திருப்பூருக்குச் சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்து அவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

விசாரணையில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மோசடி செய்த அனைத்துக் குற்றங்களையும் அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், அவர் பயன்படுத்தி வந்த கார், போலி ஆவணங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து துரைராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை சிறையிடைத்தனர்.

Top